ஆயிரம் தவிப்புக்கள். திரும்பிய இடங்கள் எங்கும் பிணக்குவியலை தாண்டி ஓடிய கால்கள் மரத்து விட்டதான உணர்வு. பிணங்களின் இரத்தவாடை இன்னும் போகவில்லை கால்கள் சிவந்து போய் கிடந்தன. அங்கிருந்த பலருக்கு காயங்களில் இருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இரத்தத்தை கட்டுப்படுத்தக் கட்டப்பட்டிருந்த சாறமும் சேலையும் நனைந்து இரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. அந்த இரத்தக் கசிவு இன்னும் அவர்களை எவ்வளவு நேரம் உயிருடன் வைத்திருக்கும் என்பது தெரியவில்லை. எதுவுமே செய்ய முடியாதவர்களாய் அமர்ந்திருக்கிறோம்.
இப்போது தான் சாவை விட அதிக பய உணர்வு எமக்கு ஏற்படத்தொடங்கி இருந்தது. மே 18 ஆம் நாள் அதிகாலை கைகளை தூக்கிக் கொண்டு நிற்கின்றோம். யாரை எதிர்த்து இதுவரை ஆயுதம் ஏந்தி நின்றோமோ அந்த பகைவனிடம் மண்டியிட காத்துக்கொண்டு நிற்கின்றோம். வட்டுவாகல் பாலத்திற்கு முன் பக்கமாக இறுதியாக உடைக்க முடியாது நிமிர்ந்து நின்ற எம்மவரின் காவலரண்களை தாண்டி நின்றோம். முன்னும் பின்னும் நிறைந்திருந்து சன நெரிசல். எம் உணர்வுகளில் எங்கிருந்து எப்போது என்ன வெடிக்கும் என்று புரியாத பரிதவிப்பு.
திடீர் என்று எமக்கு முன்னால் ஒரு மகசின் ரவைகள் வெடித்து ஓய சில பிணங்கள். எங்கிருந்து சூடு வருகிறது என்றறிய முடியாத இருள். ஆனாலும் பாதையின் அருகே இருந்த பற்றைக்காட்டில் இருந்து சுடப்படுவதை இனங்கண்டு “ஐயா நாங்கள் பொதுசனம் எங்கள சுடாதேங்கோ ” சனக்கூட்டம் ஓலமிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு ரவைக்கூடு முடிய நிறுத்திய சூட்டை அடுத்து இரு கரிய உருவங்கள் வெளி வருகின்றன. “கைகளை உயர்த்தியபடி தனி வரிசையாக செல்ல கட்டளை இடுகின்றனர் சிங்கள இராணுவச் சிப்பாய்கள். அதில் வந்த யாரோ ஒருவர் சிங்களத்தில் கூறப்பட்டதை மொழி பெயர்க்கின்றார். நாம் வரிசையாக உள் நுழைகிறோம்.
வட்டுவாகல் பாலம் எமது பாரம் தாங்க மாட்டாது அழுது கொண்டிருக்கிறது. இருபக்கமும் நீல நிறத்தில் அழகாக ஒளிரும் அந்த பாலத்தின் இருமருங்கும் பல உயிரற்ற உடலங்கள் எமது சுவாசத்தை அடைக்க வைக்கிறது. உயிர் பயம் மேலோங்கி விழிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. அம்மாவை நானும் அப்பாவும் சமாதானப்படுத்துகிறோம். இனி எதுவும் இல்லை நாம் உயிர் தப்பி விட்டோம். பயமின்றி இருக்க போகிறோம். இனி எமக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி பயப்பிடாமல் இருக்க வேண்டுகிறோம். ஆனால் அதுவரையும் எங்கோ இருந்து ஏவும் வெடிகளின் வெடிப்பை கண்முன்னே கண்ட நாம் எமது கண்களிலும் செவிகளிலும் எமது உடலிலும் தொடுகையுடனான வெடிப்புக்களை சந்திக்கப் போகும் தருணம் மிகத் தொலைவில் இல்லை என்பதை புரிந்தே இருந்தோம்.
கைதுகள், காணாமல் போதல், என்றும் சித்திரவதைகள், கொலைகள் என்றும் சிங்களப்படை எம்மீது எந்த தடைகளும் இல்லாது எதையும் செய்யும் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்தே இருந்தோம். மனதில் எழுந்த பய உணர்வுகளை அடக்கி கொள்கிறோம்.
முல்லைத்தீவில் இருந்து எம்மைத் தாண்டிச் செல்லும் அதி பயங்கர செல் வீச்சு நந்திக்கடல் பக்கமாக வீழ்ந்து வெடிப்பதும் பலமான எதிர்ச்சண்டை நடப்பதும் எம் செவிகளில் வீழ்ந்த போது எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் இறுதியாக தீயை உமிழ்வது புரிந்து கொள்ள முடிந்தது.
அதி பயங்கர சண்டை அது எதற்கான சண்டை என்பது புரிந்து கொள்ள கூடியதாக இருந்தாலும் எம் மக்களின் மனதில் நாம் ஒரு பாதுகாப்பு வலையத்திற்குள் வந்து விட்டதான உணர்வே மேலோங்கி இருந்தது. எமக்காக வாழ்ந்தவர்களை, எம்மோடு வாழ்ந்தவர்களை, அண்ணனை, தம்பியை, அக்காவை, தங்கையை தனிய விட்டு எம்முயிர்காக்க வந்துவிட்டோம். இதை அந்த நேரத்தில் யாரும் சிந்திக்கவில்லை. சில முடிவுகளை எடுக்க எம்மிடமே அதிகாரம் இருந்த போது இராணுவத்திடம் வந்து சேரவே விரும்பினோம். ஆனாலும் எம்மில் பலருக்கு உண்மை புரிந்திருந்தாலும் இனி செய்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மனது படபடக்க பயவுணர்வை கட்டுப்படுத்தி பாலத்தில் அமர்ந்திருந்தோம்.
திடீர் என்று என் பின்னால் அமர்ந்திருந்த எனது மைத்துனன் ஒருவன் என் முதுகின் மீது சாய்கிறான் என்ன என்று திரும்பி பார்த்த போது அவனின் கழுத்துக்கு பின்புறமாக ஒரு ரவை கிழித்துச் சென்றதுக்கான காயம் இருந்தது. இரத்தம் பீறிட்டு வர எமக்கு பின்புறமிருந்து எம்மை நோக்கி இராணுவம் சுடுவதை உணர்ந்து நிலத்தோடு சாய்கிறோம். சிறிது நேரத்தின் பின் எழுந்து பார்த்த போது அந்த இடத்தில் மூன்று நாலு உறவுகள் காயப்பட்டிருந்தனர். அந்த இடத்தில் இரத்தத்தை கட்டுப்படுத்துவதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை அதற்கு எதுவும் எம்மிடம் இல்லை போட்டிருந்த உடுப்புக்களை கழட்டி காயத்துக்கு கட்டுகிறேன்.
பல மணி நேர காத்திருப்பு பாலத்தின் மேல் அமர்ந்திருந்த எம்மை இராணுவம் உள்ளே வருமாறு அழைக்கிறது. அடிமைகளாக செல்வதற்கு எமது சனம் அடிபடத் தொடங்கியது நான் முந்தி நீ முந்தி என்று சண்டையிட்டு எமது மக்கள் சிங்கள இராணுவத்தின் கம்பி வேலிக்குள் செல்ல முண்டியடித்துக் கொண்டிருந்த அதே நேரம் உள்ளே போக மனதில் இடம் இல்லாமல் காலடிகள் முன் வைக்க முடியாமல் பயத்தோடு நிற்கிறார்கள் பல உறவுகள். எமக்கு பின் நிற்பவர்கள் எம்மை முன் நகருமாறு நச்சரிக்க வேறு வழியற்று எதிரியின் கம்பி வேலிக்குள் நாமும் நகர்கிறோம். எதிரியிடம் அடிமையாக நாம் செல்கிறோம் என்பதை விட இனி என்ன நடக்க போகிறது என்பதே எமக்கு பயத்தை தரத் தொடங்கி இருந்தது. அவன் அடித்து துன்புறுத்தி கொன்று விடுவானா என்பதே மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. ஆனாலும் முதல் நாள் இரவு எனது மைத்துனன் கூறிய வார்த்தைகள் கொஞ்சம் நின்மதியை தந்திருந்தன.
“நடேசண்ணையாக்கள் வெளிநாடுகளோட கதைச்சுத்தான் சரண்டைய போறாங்கள் அதனால் சிங்கள இராணுவம் எதுவும் செய்ய முடியாது பயப்பிடாதடா” சனத்தையோ போராளிகளையோ எதுவும் செய்ய மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளதாக அவன் கூறிய வார்த்தைகள் மனதில் ஒருபுறம் இருந்தாலும் முற்றுமுழுதாக மனப்பயம் போகவில்லை. எதுவும் நடக்கலாம் என்றே மனசு கூறியது. பாலம் கடந்து செல்ல கம்பிகளால் இருபக்கமும் வேலி அடிக்கப்பட்டிருந்த முல்லைத்தீவின் வயல்வெளிக்குள்ளால் ஒற்றை வரிசையில் நடக்க பணிக்கப்படுகிறோம். கனரக ஆயுதங்கள் எங்களை நோக்கி நீண்டுகிடக்க பயத்தில் உடல் நடுங்கிய நடுக்கத்தை எல்லாம் மறைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தோம்.
என் கையில் என் மருமகன் பசியில் அழுதழுது சோர்ந்து போய் கிடந்தான். 1-1/2 வயதில் உணவில்லாது தண்ணீர் இல்லாது குழந்தை சுருண்டு கிடந்தான். தாயை தந்தையை பிரிந்த ஏக்கம் அவனை சரியாக பாதித்திருந்தது. கடந்துவிட்ட 12 ஆம் திகதி நடந்த எறிகணை தாக்குதலில் முழுமையான காயங்களுக்கு உள்ளாகி இறுதியாக இயங்கிய முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அவர்களை கொண்டு போய் படுக்கவைத்து வந்துவிட்ட பின் என்னோடே அவன் ஒட்டிவிட்டான். அந்த குழந்தைக்கு பெற்றவர்கள் இல்லாத ஏக்கம் அவன் அழுகையில் தெரியும். ஒருபுறம் பசி மறுபுறம் தாயின் அரவணைப்பு எதுவுமே அற்று அவனுக்கு எல்லாம் நானாகிவிட்ட நிலையில் எனக்கும் ஏதாவது நடந்தால் அந்த குழந்தை தாங்க மாட்டான் என்பது வெளிப்படையாக தெரிந்தது. பயத்திலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் நாம் அந்த கம்பி வேலிக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறோம்….
தொடரும்…
(முள்ளிவாய்க்காலில் முடங்கிப் போன எம்மவர் நினைவுகளை மீட்டும் என் பதிவுகளூடாக பலர் மனசை வருத்தமடைய செய்துவிட்டேன். என் உறவுகளை நானே அழவைத்துவிட்டேன். மறக்க நினைப்பவற்றை, மறக்க முடியாத தவிப்பவற்றை பதிவுகளாக்கி அடிமனதில் இருந்தவற்றை கிளறி அவர்களுக்கு மனவேதனையை கொடுத்துவிட்டேன் அதனால் எம் வலிகள் கூடிய நாட்களான இந்த மே மாதத்தில் “மனசு தொலைக்குமா” தொடர் பதிவேற்றுவதை நிறுத்தி இருந்தேன். ஆனால் வெளிவர வேண்டிய பல களச்செய்திகளும் துயர நிகழ்வுகளும் கட்டாயமாக வெளிவர வேண்டும் என்று அவர்களே இப்போது என்னை வேண்டுகிறார்கள் அதனால் மீண்டும் தொடர்கிறேன்.)
– கவிமகன்