வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த 17ம்திகதி நடந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட முக்கியமான விவகாரங்களில் ஒன்று வடக்கில் படைகளைக் குறைக்கும் விடயமாகும்.
வடக்கிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டும் என்பதை வட மாகாண முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறி வந்திருக்கிறார்.
ஆனாலும் வடக்கில் இருந்து தாம் இராணுவத்தை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரவில்லை எனவும், வடக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக விலக்க வேண்டும் என்று தான் கோருவதாக சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாவதாகவும் கூட முதலமைச்சர் அண்மையில் ஒரு சந்தர்ப்பத்தில் வருத்தம் வெளியிட்டிருந்தார்.
அதற்குப் பின்னர் தான் ஜனாதிபதியுடனான சந்திப்பும் வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சுக்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
வடக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டால் அவர்களை எங்கு நிறுத்துவது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணங்களிலும் நிறுத்துங்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.
இலங்கையில் இப்போது பிராந்திய ரீதியாக ஏழு இராணுவத் தலைமையகங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு இந்த நான்கும் வடக்கில் உள்ள தலைமையகங்கள். எஞ்சிய மூன்றில் ஒன்று கிழக்கில் இருக்கிறது. மற்றைவை மேற்கு மற்றும் மத்திய தலைமையகங்களாகும்.
இந்த பிராந்திய களத் தலைமையகங்கள் என்று பார்த்தால் வடக்கில் ஏழில் நான்கு பங்கு இருக்கின்றன. இது முழு இராணுவத்தில் அரைப்பங்கை விட அதிகம்.
பிராந்திய படைத் தலைமையகங்கள் என்ற அடிப்படையில் இராணுவத்தினர் எண்ணிக்கை ரீதியாக சமமாக பிரிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூற முடியாது. இந்த ஏழு பிராந்தியத் தலைமையகங்களும் ஒரேயளவான டிவிசன்கள் பற்றாலியன்களைக் கொண்டவையல்ல.
சில தலைமையகங்களின் கீழ் மூன்று நான்கு டிவிசன்கள் இருக்கின்றன. சிலவற்றின் கீழ் இரண்டு டிவிசன்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு படைகளின் தலைமையகத்தின் கீழ் 51, 52, 55 என மூன்று டிவிசன்கள் உள்ளன.
வன்னி தலைமையகத்தின் கீழ் 21, 54, 56, 61, 62 என ஐந்து டிவிசன்கள் இருக்கின்றன. கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் 57, 65, 66 என மூன்று டிவிசன்களும், முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கீழ் 59,64, 68 என மூன்று டிவிசன்கள் இருக்கின்றன.
அதேவேளை மேற்கு படைகளின் தலைமையகத்தின் கீழ் 14,58 என இரண்டு டிவிசன்கள் மாத்திரமே இருக்கின்றன. மத்திய பிராந்திய தலைமையகத்தின் கீழ் 11, 12 ஆகிய டிவிசன்கள் மாத்திரம் இருக்கின்றன.
தலைமையக ரீதியாக மாத்திரமன்றி அவற்றின் கீழ் உள்ள டிவிசன்கள் ரீதியாகவும் வேறுபாடுகள் உள்ளன.
வடக்கு மாகாணத்தில் நான்கு தலைமையகங்களின் கீழும் மொத்தம் 14 டிவிசன்கள் இருக்கின்றன. கிழக்கு தலைமையகத்தின் கீழ் மூன்று டிவிசன்கள் இருக்கின்றன.
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் மொத்தம் 17 டிவிசன்கள் நிறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் மத்திய மற்றும் மேற்கு தலைமையகங்களின் கீழ் வெறுமனே நான்கு டிவிசன்கள் மா்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
அதிலும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் என நான்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒன்பது மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மேற்கு படைகளின் தலைமையகத்தின் கீழ் இரண்டு டிவிசன்களை உள்ளடக்கியதாக ஆறு பிரகேட்களைச் சேர்ந்த 12 பற்றாலியன்கள் மாத்திரமே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, 1129.9 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட யாழ். குடாநாட்டில் மூன்று டிவிசன்கள் மற்றும் இரண்டு முன்னரங்க பிரதேச தலைமையகங்களில் குறைந்தது 15 பிரிகேட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் உள்ள பிரிகேட்களின் கீழ் உள்ள பற்றாலியன்கள் கூட சமமானவையாக நிறுத்தப்படவில்லை. இது இராணுவத்தின் அதிகாரபூர்வ தகவல்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளாகும். விமானப்படை, கடற்படை ஆகியவற்றிலும் இதே நிலை தான் உள்ளது.
இராணுவத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் பல மறைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு 58வது டிவிசனின் மூன்று பிரிகேட்கள் மேற்குப் பிராந்திய தலைமையகத்தின் கீழ் உள்ள காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த டிவிசனின் கீழ் உள்ள 582 பிரிகேட்டின் ஒரு பற்றாலியன் கிழக்கு படைகளின் தலைமையகத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய குறைந்தது மூன்று பற்றாலியன்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.
அதுபோலவே இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவான 53வது டிவிசனின் பிரிகேட்கள் எங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்ற அதிகாரபூர்வமான எந்த தகவலையும் இராணுவத் தலைமையகம் வெளியிடவில்லை.
இதனால் இராணுவத்தின் டிவிசன்கள், பிரிகேட்கள், பற்றாலியன்கள் என்ற ஒழுங்கிற்கு மாறாகவும் சில இடங்களில் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வடக்கில் ஒன்றரை லட்சம் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் எந்தளவுக்கு உண்மைகள் உள்ளன என்பது தெரியவில்லை.
எனினும் வன்னிப் படைகளின் தலைமையகத்தில் உள்ள 21, 54, 56 மற்றும் 61 ஆகிய நான்கு டிவிசன்களின் கீழ் உள்ள படையினரின் எண்ணிக்கை பற்றிய அதிகாரபூர்வ தரவுகளின் அடிப்படையில் டிவிசன் ஒன்றின் ஆட்பலம் சராசரியாக 2897 எனவும், பிரிகேட் ஒன்றின் ஆட்பலம் 1053 எனவும், பற்றாலியன் ஒன்றின் சராசரி ஆட்பலம் 503 எனவும் கணிக்க முடிகிறது.
இந்த வகையில் கணிப்பிட்டால் யாழ்.படைகளின் தலைமையகத்தின் கீழ் 15 பிரிகேட்களிலும் சுமார் 16 ஆயிரம் படையினர் தான் இருக்க முடியும். அதுபோலவே வன்னிப் படைகளின் தலைமையகத்தின் கீழும் கிட்டத்தட்ட இதேயளவான படையினரே நிலைகொண்டிருக்க வேண்டும்.
கிளிநொச்சியில் 10 ஆயிரம் படையினரும், முல்லைத்தீவில் சுமார் 9 ஆயிரம் படையினரும் நிலைகொண்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் சுமார் 51 ஆயிரம் படையினர் வடக்கில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர் என்று கருதலாம்.
அதேவேளை, இராணுவத்தின் இத் தரவுகள் சரியானதாக இருந்தால் 25 டிவிசன்களைக் கொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் மொத்த ஆட்பலம் 72,500 வரையாகத்தான் இருக்க முடியும்.
ஆனால் போர் முடிவுக்கு வந்த போது இலங்கை இராணுவத்தின் மொத்த ஆட்பலம் இரண்டு லட்சத்தை தொட்டிருந்தது. அதற்குப் பின்னர் தப்பி ஓடியவர்கள், ஓய்வு பெற்றவர்களை நீக்கிப் பார்த்தாலும் ஒன்றரை லட்சம் படையினராவது இப்போது இருக்க வேண்டும்.
அவ்வாறாயின் மீதிப் படையினர் எங்கே என்ற கேள்வி எழுகிறது. இராணுவத்தின் மொத்த ஆளணியில் கணிசமான பகுதி வடக்கில் தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவை பற்றிய துல்லியமான கணிப்பீடுகள் மேற்கொள்ள முடியாதுள்ளது. ஏனென்றால் இராணுவத்தின் முழுமையான அதிகாரபூர்வ தரவுகள் இல்லை.
ஓர் இராணுவம் தனது ஆள், ஆயுத பலம் பற்றிய இரகசியங்களை் வெளியிடுவதில்லை. ஆனாலும் ஆளணி எண்ணிக்கை ரீதியாக இதனை உறுதியாக நிரூபிக்க முடியாவிடினும் கட்டளை அமைப்பு ரீதியாக நாட்டின் ஏனைய பகுதிகளை விட படையினர் வடக்கிலும் கிழக்கிலுமே குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
வடக்கில் இருந்து படையினரை முற்றாக நீக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான குரல்கள் சில எழத்தான் செய்கின்றன. நீண்ட போர் நடந்த பிரதேசத்தில் இருந்து முழு இராணுவத்தையும் விலக்கிக் கொள்வதற்கு எந்தவொரு அரசாங்கமும் தயாராக இருக்காது.
வடக்கின் பாதுகாப்பு நிலை மற்றும் கேந்திர முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்டளவு படையினரை மாத்திரம் வைத்துக் கொண்டு எஞ்சியுள்ள படையினரை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது தான் நியாயமானது. எல்லாத் தரப்பினராலும் அந்த வாதமும் கோரிக்கையும் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.
அந்தவகையில் ஒன்பது மாகாணங்களிலும் இராணுவத்தினரை சமமாகப் பிரித்து நிறுத்தும் முதலமைச்சரின் கோரிக்கை நியாயமானது தான். ஆனால் அதற்கு அரசாங்கம் இணங்க வேண்டுமே.
வடக்கு முதலமைச்சர் கனவு காண்கிறார். அவரது கோரிக்கைப்படி படையினரை விலக்க முடியாது. அவரது தாளத்துக்கு ஆட முடியாது என்று அமைச்சர் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.
வடக்கில் படைக்குறைப்பு நடக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கையாகவே இருந்தாலும் முழு அளவிலான படைவிலக்கமாக அதனை முன்வைத்தால் தமிழர் தரப்பு சர்வதேச அளவில் இதற்குச் சாதகமாக உள்ள நிலையையும் கெடுத்துக்கொள்ள நேரிடும். சிங்கள மக்களையும் உசுப்பேற்றி விடுவதாக முடிந்து விடும்.
வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் அதனைத்தான் செய்ய விரும்புகிறார்கள். அது தமிழர்களை மேலும் கடும்போக்காளர்களாகவே அடையாளப்படுத்தும். அந்நியப்படுத்தும்.
மாகாணங்களில் சமமாக இராணுவத்தை நிறுத்தும் கோரிக்கையை வலுப்படுத்துவது தான் தமிழர் தரப்பின் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்க முடியும்.