அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவும், அவரை முத்தமிட்ட பின்னரே வெளியேற அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுக்குள்ளானவரும் ஒரு புகலிடக் கோரிக்கையாளராவர். அவர் 2014ஆம் ஆண்டு மெல்பேர்ன் மருத்துவமனையில் பணிக்குச் சென்ற போதும், சக பணியாளரை முத்தமிட்டதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய செயல்களை பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களாக கணித்து, குற்றம்சாட்டப்பட்டவருக்கு புரோட்மிடோஸ் நீதிவான் நீதிமன்றம், ஒரு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
அத்துடன், 18 மாத சமூக சீர்திருத்த திட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.
இதற்கமைய, ஒரு மாத சிறைத்தண்டனை முடிந்த பின்னர், 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டவர் அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடுவதற்கு முன்னர், சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர் என்றும், குண்டுவீச்சுகள், வன்முறைகளின் சாட்சியாக இருப்பவர் என்றும், நீதிமன்றத்தில் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.