இந்தியாவில் பெண் ஒருவர் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு தன் உறவினரை மீட்டுள்ளதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிப்(21), இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
தன் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், கடந்த 23-ஆம் திகதி சவாரி சென்றுள்ளார்.
அப்போது காரில் இரண்டு வாலிபர்கள் ஏறியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும், அவர்கள் ஆசிப்பை மிரட்டியும், அடித்தும் அவரிடம் இருந்த பர்சை பறித்துள்ளனர்.
பர்சில் குறைந்த அளவே பணம் இருந்ததால், அவர்கள் உடனடியாக ஆசிப்பை கடத்தியுள்ளனர்.
கடத்திய அவர்கள் ஆசிப்பின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு, உங்கள் பையன் வேண்டும் என்றால் 25,000 ரூபாய் தரும்படி மிரட்டியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பணத்துடன் வரும்படி கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆசிப்பின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். ஆசிப்பின் அண்ணன் மனைவி ஆயிஷா(33), இவர் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை.
இந்நிலையில் பொலிசார் குறித்த பூங்காவிற்கு சாதாரண உடையில் சென்றுள்ளனர். ஆயிஷாவும் அவரது கணவரும் மற்றொரு காரில் சென்றனர்.
அப்போது தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியையும் ஆயிஷா எடுத்துச் சென்றுள்ளார்.
பூங்காவை நெருங்கியதும் கடத்தல்காரர்களிடம் பணத்தை கொடுக்க ஆயிஷா சென்ற போது, பொலிசாரின் நடமாட்டத்தை கடத்தல்காரர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
இதனால் கடத்தல்காரர்கள் இங்கு வேண்டாம் என்று கூறி வேறொரு பூங்காவுக்கு பணத்துடன் வருமாறு போனில் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் ஆயிஷாவை சுற்றவைத்துள்ளனர்.
இறுதியாக ஆயிஷா பணத்துடன் கடத்தல்காரர்களை நெருங்கிய போது, யாரும் எதிர்பாராத வேளையில் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கடத்தல்காரர்களை சுட்டார்.
ஒரு கடத்தல்காரரின் தோளிலும் மற்றொரு கடத்தல்காரரின் காலிலும் சுட்டார். உடனடியாக விரைந்து வந்த பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.
ஆசிப் பத்திரமாக மீட்கப்பட்டார், ஆயிஷாவிடம் இருந்த துப்பாக்கியை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பொலிசார் கூறுகையில், ஆசிப்பின் உயிரைக் காப்பாற்ற துப்பாக்கியால் சுட்டதாக ஆயிஷா கூறியுள்ளார். அவர் கூறியது உண்மை என்றால் சட்டவிதிகளின்படி அவர் செய்ததில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளனர்.