பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புவதாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாது விட்டால் அந்தக் கடும்போக்குவாதிகளின் முயற்சியே இறுதியில் வென்றுவிடும் என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
போர் முடிந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை இந்த நாட்டுப் பிரஜைகளாக நடத்துவதற்கு இரண்டு அரசுகளாலும் முடியவில்லை.
அவர்கள் இந்த விடயத்தில் தோல்வியடைந்துவிட்டதாகவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இனவாதம் காரணமாகவோ அல்லது பிரிவினைவாதம் காரணமாகவோ தமிழர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. பொருளாதாரத்தைப் பகிர்வதில் ஏற்பட்ட இனப் பாகுபாடு காரணமாகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினர்.
ஆட்சியாளர்கள் இந்தக் காரணத்தை இன்னும் விளங்கவில்லை. விளங்கி இருந்தால் போர் முடிந்த இந்த எட்டு வருடங்களுக்குள் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை தமிழ் பிரிவினைவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். இங்கே தமிழர்கள் பேராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று உலகம் பூராகவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த பிரசாரம் காரணமாக தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளும் நன்மை அடைந்து வருகின்றனர்.
பிரபாகரனின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள இந்தக் கடும்போக்குவாதிகளே பிரபாகரன் மீண்டும் பிறப்பதை விரும்புன்றனர்.
மீண்டும் விடுதலைப்புலியைக் காட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் முயற்சி செய்கின்றார்கள்.
போர் முடிவுக்கு வந்து 8 வருடங்களாக எம்மால் இந்தக் குழுக்களைத் தோற்கடிக்கவும் முடியவில்லை. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் முடியவில்லை.
இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளின் திட்டம்தான் வெற்றிபெறும் என்பதை அரசு உணர்ந்து அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.