திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் எந்தவித பாரபட்சமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று(30) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும்,
இவ்வாறான சம்பவங்கள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பாடசாலைகளில் நிகழ்வது பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பான நம்பிக்கைத் தன்மையைச் சிதைவடையச் செய்கின்றன.
எனவே, பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்த வித பாரபட்சமும் இன்றி அதி உச்ச தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.