காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்திற்கு நீதிமன்றில் பொலிஸார் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இரவு பகலாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 100 நாட்களை குறிக்கும் வகையில் காணாமல் போனோரின் உறவினர்களினால் வீதி மறியல் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த வீதிமறியல் போட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவினைப் பெற்ற பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த மக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்தோடு, மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒளிப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இன்றைய தினம் சர்வமத பிரார்த்தனை ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நிறைவுற்று எட்டு வருடங்களாகிய பின்னரும் தமது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தீர்க்கமான பதிலையும் அரசாங்கம் வழங்காத நிலையில், விசாரணைகளிலும் நம்பிக்கையற்று இம் மக்கள் இறுதியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேசத்தின் தலையீட்டுடன் நம்பகரமான விசாரணைகளை முன்னெடுத்து தமது உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.