பங்களாதேஷின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியை மோறா சூறாவளி இன்று தாக்கியதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் துறைமுகம் (port of Cox Bazar) மற்றும் சிட்டகொங் (Chittagong) ஆகிய நகருக்கு இடைப்பட்ட பிரதேசம் இந்த சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 117 கி.மீ. எனும் வேகத்தில் வீசியதாகவும், கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள வீடுகள் சேதமுற்றுள்ளதாகவும் பங்களாதேஷ் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளியால் இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் சில பாகங்களும் பாதிப்படையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியன ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை குறைந்தது 180 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.