இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் அரசாங்கம் விடுத்த இந்த அறிவிப்பு உலகுவாழ் இந்து மக்களுக்கு பலத்த ஆறுதலைத் தந்துள்ளது.
இந்து சமயத்தவர்களைப் பொறுத்தவரை மாடுகள் அவர்களின் வழிபாட்டுக்குரியவைகள்.
தாய்க்கு ஈடாகப் பால் தரும் பசுக்களை கோமாதா என்று போற்றி வழிபடுகின்ற பண்பாடு இந்து சமயத்தில் உண்டு.
பசுவின் பால் உலகுவாழ் மக்களின் நிறை உணவு. உலகம் முழுவதும் வாழும் மக்கள் பசுப்பாலை அருந்துகின்றனர்.
தவிர சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகிய சிவப்பரம்பொருளின் வாகனமாக எருது விளங்குகின்றது. தவிர இந்து சமயத்தவர்கள் அணியும் திருநீறு பசுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.
ஆக, பசுக்களும் எருதுகளும் இந்து சமயப் பண்பாட்டில் தெய்வத்தின் இரண்டாம் நிலை கொண்டவை என்று கருதப்படுபவை.
இந்நிலையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதென்பது மிகப்பெரும் பாவம்.
அதிலும் ஞானபூமியாக விளங்கும் பாரத பூமியில் பசுக்கள், எருதுகள் இறைச்சிக்காக வெட்டப் படுவதென்பது பாரத பூமியின் பெருமைக்கும் அதன் கண்ணுள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கும் இழுக்காகும்.
இந்நிலையில் இந்தியா எங்கும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மன நிம்மதியைத் தருகின்றது.
இந்தியா எடுத்த இந்த முடிவு இலங்கையிலும் எடுக்கப்பட வேண்டும்.
சிவபூமி என்று போற்றப்படும் இலங்கை சிவ பக்தனான இராவணேஸ்வரனால் ஆட்சி செய்யப்பட்டது.
அந்த வகையில் இலங்காபுரி தெய்வீக சக்தி கொண்ட நாடு.எனினும் மனிதவதைகளும் மிருக பலிகளுமாக எங்கள் நாட்டின் தெய்வீகத் தன்மை தேய்ந்து நலிந்து செயலிழக்கலாயிற்று.
இத்தகைய நிலைமையில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.
அதில் ஒன்று, மனித வதைகள் இல்லாது போவதுடன் இந்து மக்கள் போற்றி வணங்கும் பசுக்களின் வதையும் நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் இது ஒரு விசேட ஏற்பாடன்று.ஆமை பிடிப்பதற்கு தடை, உடும்பைக் கொல்வதற்குத் தடை என்ற சட்டங்கள், அவை பெளத்த மதத்துடன் சம்பந்தப்பட்டவை என்பதால் ஏற்படுத்தப்பட்டவை.
இதுபோலத்தான் பசுக்கள், எருதுகள் இந்து மக்களின் வழிபாட்டுடன் தொடர்புபட்டவை.
தவிர, பசுக்கள் தரும் பாலை நாம் பருகுவதால் பசுக்கள் நமக்குப் பால் தந்து கோமாதா என்ற உயர்ஸ்தானத்தைப் பெற்று விடுகின்றது.
ஆகையால் மதம், இனம், மொழி என்ற பேதம் கடந்து மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
ஆம், இந்தியப் பிரதமர் மோடியின் அறிவிப்புப் போல எங்கள் நாட்டிலும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
– Valampuri