திருமுருகன் காந்தி உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஆண்டுதோறும் மே மாதம் 17, 18, 19ஆம் திகதிகளில் தமிழகமெங்கும் குறிப்பாக, சென்னை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தமிழர்கள் கடைப்பிடித்து, கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவது வழக்கமாகும்.
இவ்வாண்டு, இந்த நாளை சென்னை கடற்கரையில் கடைப்பிடித்ததற்காக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சமூக விரோதிகளின் மீது ஏவப்பட வேண்டிய குண்டர் சட்டத்தை பொதுநலத் தொண்டர்களுக்கெதிராக தமிழக அரசு பயன்படுத்தியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உடனடியாக அவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.