மண்ணின் கலைகளை நாம்முன்னின்று வளர்ப்போம் ஆற்றுகையால் எண்ணங்களை வென்றெடுப்போம் என்ற வாசகத்துடன் ரிரிஎன் தமிழ் ஒளி இரண்டாவது தடவையாக நடாத்தும் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 இற்கான கிராமிய நடனப்போட்டி நிகழ்வு நேற்று 27.05.2017 சனிக்கிழமை பிரான்சு Bondy நகரப் பகுதியில் பிரமாண்டமான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், போட்டியாளர்கள் இன்னிய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துவரப்பட்டனர்.
பிரதம விருந்தினர்களாக Bondy மேயர் திருமதி .செல்வின் தோமசன், துணை மேயர் சாலி மோனயா, அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.சந்தோஸ், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ்,Bondy பிராங்கோ தமிழ்சங்கத் தலைவர் திரு. கலைச்செல்வன் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உபகட்டமைப்புக்களின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றிவைத்து நிகழ்வுகளைத் தொடக்கிவைத்ததுடன் தொடர்ந்து Bondy மேயர் திருமதி .செல்வின் தோமசன், துணை மேயர் சாலி மோனயா ஆகியோர் குறித்த நிகழ்வு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக உரையாற்றியிருந்தனர்.
தொடர்ந்து நடுவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
பிரதம நடுவராக
திருமதி மதிவதனி சுதாகர் (முதுகலை மாணி) திருக்கோணேஸ்வரர் நடனாலயம் – சுவிற்சர்லாந்து)
நடுவர்களாக
திருமதி சாமினி சந்திரகுமார் (நாட்டியக் கலைமாணி, கலைமாணி B.A) யாழ்.வண்ணை நாட்டியப்பள்ளி – லண்டன்)
திருமதி யாழினி பாலேந்திரன் (பரதக்; கலைமாணி, முதுமாணி M.A) நித்திய சதங்கி நர்த்தனாலயா – டென்மார்க், நோர்வே)
திருமதி மாலதி யோகேந்திரன் (நாட்டியக் கலைமாமணி) சிவாஞ்சலி நர்த்தனாலயா – நோர்வே)
அனைத்துலக கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் நடுவர்களை பொன்னாடை போர்த்தி மதிப்பளிப்புச் செய்துவைத்தார்.கலைஞர் புலத்தூர் சுந்தரம் அவர்களின் அறிமுக உரையைத் தொடர்ந்து ஊரகப்பேரொளி பாடல்காட்சி திரையில் காண்பிக்கப்பட்டது.
கலைஞர் புலத்தூர் சுந்தரம் அவர்கள் தனது உரையில் இவ்வாறான கிராமிய நடனப் போட்டிகள் நிகழ்வது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஆனால் ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சி இவ்வாறான ஒரு பணியை மேற்கொள்வது பாராட்டத்தக்க விடயம். எமது கிராமிய மணம் மிக்க இந்நிகழ்வுகள் புலம்பெயர் மண்ணில் தொடர்ந்து நிகழவேண்டும் என்பதே எனது பேரவா. இந்த கிராமிய படைப்புக்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கலைஞர்களையும் வாழ்த்துகின்றேன் என உணர்வுபொங்கத் தெரிவித்தார்.
தொடர்ந்து நடுவண்பிரிவு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. இடைவேளையைத் தொடர்ந்து கீழ்ப்பிரிவு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றன. குறித்த போட்டிகளில் சின்னஞ்சிறு மாணவர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு போட்டிகளின் நிறைவிலும் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். சிறப்பு நிகழ்வாக ஊரகப்பேரொளி பாடல் காட்சியை உருவாக்கிய கலைஞர்கள் மதிப்பளிப்பு செய்யப்பட்டனர். குறித்த மதிப்பளிப்பினை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் வழங்கிவைத்தார்.
தொடர்ந்து நிகழ்வில் மற்றொரு முக்கிய நிகழ்வாக தமிழ் தேசிய ஊடகங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த ஊடகங்களின் சார்பில் ஊடகவியலாள்களை தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் திரு.விஸ்வநாதன் அவர்கள் மதிப்பளிப்பு செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் ஊரகப்பேரொளி நினைவு சுமந்த சிறப்பு நூல் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெளியிட்டுவைக்கப்பட்டது. அழகிய வடிவமைப்புக்கொண்ட குறித்த நூலின் முதற்பிரதியை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்டுவைக்க பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், பிரதிநிதிகள் ஒவ்வொன்றாக நூலின் பிரதியை பெற்று சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மேற்பிரிவு போட்டிகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் பிரிவு நிகழ்வுகளும் காண்பவர்களைக் கொள்ளைகொள்ளக்கூடியதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரமாண்டமான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகவும் நேர்த்தியாகவும் எழுச்சி ஊட்டக் கூடிய வகையிலும் பக்திப்பரவசமூட்டக்கூடியதாகவும் கிராமிய மண்வாசனையை புடம்போட்டுக் காட்டக்கூடியதாகவும் நிகழ்வுகள் அமைந்திருந்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயம்.
நிகழ்வை திறம்பட தொகுத்தளித்தும் அறிவிப்புச் செய்தும் அனைவரின் கவனத்தையும் தம்பால் ஈர்த்துவைத்திருந்த ரிரிஎன் அறிவிப்பாளர்களான திரு.குருபரன், திரு. பார்த்தீபன், திருமதி கவிதா, ரூபி ஆகியோர் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.
குறித்த நிகழ்வுகளை நேர்த்தியாக உருவாக்கிப் படைத்த ஆசிரியர்களின் பணி மகோ உன்னதமானது.
தொடர்ந்து குறித்த நிகழ்வுகளைப் படைத்த ஆசிரியர்கள் அரங்கில் நினைவுப் பரிசில் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர். குறித்த மதிப்பளிப்பினை கல்விமேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் குறித்த நிகழ்வுகளை நிகழ்த்திய மாணவ மாணவிகளையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டியதுடன், இவ்வாறான ஏனைய நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதேவேளை, ரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றியும் அத்துடன் ஏனைய தமிழ் தேசிய ஊடகங்களையும் ஊக்குவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் பெரும் கரகோசத்துக்கு மத்தியில் நினைவுப் பரிசில் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். குறித்த மதிப்பளித்தலை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் வழங்கி மதிப்பளித்திருந்தார். நடுவர்களின் சார்பில் பிரதமநடுவர் அவர்கள் தமது உணர்வைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில் இந்த நிகழ்வுகள் எமக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. பரதத்தைப் பார்த்த எமக்கு குறித்த கிராமிய நடன நிகழ்வுகள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் மாணவர்கள் மிகவும் திறமையாக நிகழ்வுகளைப்படைத்திருந்தனர். இதில் கலந்துகொள்ள எமக்கு ஒருவாய்ப்பை வழங்கிய ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சிக்கு நடுவர்களின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
ஊரகப்பேரொளி அங்கத்தவர்கள் அரங்கில் அழைக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நன்றி உரைக்கப்பட்டது. அத்துடன் ஊரகப்பேரொளி நிகிழ்வு திறம்பட நடந்து முடிவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. குறித்த நன்றியறிதலை ரிரிஎன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் அதன் ஆசிரியர் குழுமத்தைச்சேர்ந்த திரு.கணேஸ்தம்பையா அவர்கள் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பரிசளிப்பினை கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணிமனைப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமார், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா, ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சியின் பணிப்பாளர் திரு.ரூபன் ஆகியோர் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
ஒவ்வொரு பிரிவுகளின் வெற்றியாளர்களையும் அறிவிக்கும் போதும் மிக நேர்த்தியாக திரையில் காண்பிக்கப்பட்டமை பாராட்டத்தக்க விடயமாக இருந்தது. இதனை ஒழுங்குபடுத்திய ரிரிஎன் தொழில்நுட்பவியலாளர்களின் பணி அனைவரையும் கவர்ந்திருந்தது.
நடுவண்பிரிவு
முதலாம் இடம்: குசான்வில் தமிழ்ச்சோலை
இரண்டாம் இடம்: சேர்ஜி தமிழ்ச்சோலை
மூன்றாம் இடம்: ஆர்ஜெந்தை தமிழ்ச்சோலை
கீழ்ப்பிரிவு
முதலாம் இடம்: குசான்வில் தமிழ்ச்சோலை
இரண்டாம் இடம்: அபிராமி நாட்டியப் பள்ளி
மூன்றாம் இடம்: சுவாசிலிரூபா தமிழ்ச்சோலை
மேற்பிரிவு
முதலாம் இடம்:சோதியா தமிழ்ச்சோலை
இரண்டாம் இடம்:குசான்வில் தமிழ்ச்சோலை
மூன்றாம் இடம்: திரான்சி தமிழ்ச்சோலை
தொடர்ந்து ஊரகப்பேரொளி – 2017 வெற்றியாரத்தை பிரான்சு சோதியா கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் தமதாக்கிக்கொண்டனர். குறித்த வெற்றியாரத்தை ரிரிஎன் தமிழ்ஒளி பணிப்பாளர் திரு.ரூபன் அவர்கள் கரகோசத்தின் மத்தியில் வழங்கியிருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு கண்டன.