அறிவியலுக்கும் பெண்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற பொதுவான கருத்து இங்கே நிலவிவருகிறது. ஆனால், இதை உடைத்து, பெண்கள் அறிவியல் துறையில் சாதனை படைத்துவருகின்றனர். அதில் ஒருவர், பூர்வி குப்தா. இயற்கை மற்றும் அறிவியல்மீது இவருக்கு இருந்த பேரார்வம், இன்று அன்டார்டிகா வரை செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இது பற்றி அவரிடம் பேசினோம்.
”உங்களைப் பற்றி…”
”நான் பிறந்தது போபால். என் அப்பா ரயில்வேயில் இருந்தார். அவருக்கு அடிக்கடி பணி இடமாற்றம் நடக்கும். அதனால், பள்ளிப் படிப்பை முடிக்கிறதுக்குள்ள லக்னோ, டெல்லி, மும்பை எனச் சுற்றிவிட்டேன். இதன் மூலம் புதிய இடங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள இயல்பாகவே கற்றுக்கொண்டேன். ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படித்தேன். நான் படிச்ச வகுப்பில் கிட்டதட்ட 500 பேர் இருந்தாங்க. ஆனால், அதில் 10 பெர்சன்ட் மட்டுமே பெண்கள். இது என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் ஏன் தொழில்நுட்பத் துறையில் அதிகமா இல்லை என யோசித்தேன். பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரணும் என்கிற எண்ணம் எழுந்தது இந்தத் தருணத்தில்தான்.
பிறகு, க்ளாஸோஸ்மித்லைன் (GlaxoSmithKline) என்ற மருந்தக நிறுவனத்தில் ஆறு வருடங்கள் பணிபுரிந்தேன். அப்போது இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற பொருளாதார நிலையில் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளின் சுகாதாரநிலை பற்றித் தெரிந்துகொண்டேன். பிறகு, பிரான்ஸ் நாட்டில் எம்.பி.ஏ படித்தேன். அங்கே கிட்டதட்ட 90 நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் படித்த அனுபவம் அலாதியானது. உலக அரசியல் முதல் தொழில்முறை ஐடியாக்கள் வரை விவாதிக்கும் பெரிய களம் அமைந்தது. இப்போது, லண்டனிலுள்ள மெக்கின்ஸி & கோ (Mckinsey & Co) நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.”
”அன்டார்டிகா செல்லும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?”
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ’ஹோம்வார்டு பவுண்டு’ (Homeward Bound) என்ற அமைப்புதான் இதற்கு முக்கியக் காரணம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், மருத்துவம் ஆகிய துறைகளில் பத்து வருடங்களாக இயங்கி வரும் பெண்களை ஒன்று திரட்டி, அவர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் ஓராண்டு பயிற்சித் திட்டத்தைக் கடந்த வருடம் ஆரம்பித்தார்கள். சொற்பொழிவு, தனிப்பட்ட பயிற்சிகள், விவாதங்கள் எனப் பலவித பயிற்சித் திட்டத்தின் முடிவில், அன்டார்டிகாவில் மூன்று வார மாநாடு நடத்துவார்கள். இது முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் மாநாடு. பதிமூன்று நாடுகளிலிருந்து 80 பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதில், ஒரே இந்திய பெண் நான்தான். இந்த அமைப்பு, உலகச் சுற்றுச்சூழல் பற்றியும் தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது. மனிதச் செயல்களால் உலகம் எவ்வளவு வேகமா பருவநிலை மாற்றத்தைச் சந்தித்துவருகிறது என்பதையும், அதற்குப் பின்னாலிருக்கும் அறிவியல் பற்றியும் எங்களுக்கு இந்த அமைப்பு சொல்லிக்கொடுக்கும். இதனால், நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தெளிவான அறிவியலோடு அணுகமுடியும்.”
”இதைச் செய்ய ஏன் அன்டார்டிகா வரை போகணும்?”
”அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அந்தப் பகுதியில் நடக்கும் பருவநிலை மாற்றங்கள். உலகளவில் நடக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள, அன்டார்டிகா பகுதியை ஆராய்ந்தாலே கண்டுபிடிக்க முடியும். மற்றொரு காரணம், இந்தக் கண்டம் அழகான, ஆழமான, வித்தியாசமான சுற்றுச்சூழல் அமைப்புகொண்டது. இந்தக் கடினமான சூழலில், பெண்கள் எப்படி சமாளிக்கிறாங்க என்பதே ஒரு சவால்தானே. இந்த மாநாட்டை முடித்துவிட்டு வரும்போது, ஒவ்வொரு பெண்ணுக்கும் பெருமளவு தன்னம்பிக்கை வளர்ந்திருக்கும்.”
”அன்டார்டிகா போக எப்படியெல்லாம் உங்களைத் தயார்படுத்திட்டு இருக்கீங்க?”
”இந்த மாநாடு அடுத்த வருஷம் பிப்ரவரியில் நடக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மற்ற பெண்களை நேரில் பார்த்து, அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயல்வேன். அன்டார்டிகாவின் வானிலை எவ்வளவு கடினமானது என எல்லாருக்குமே தெரியும். அந்தப் பகுதியின் தட்பவெப்பநிலை மைனஸ் ஆறு செல்சியஸ் முதல் ஐந்து செல்சியஸ் வரை இருக்கும். மழை, மூடுபனி, வேகமாக வீசும் காற்று, பனிமூட்டம் என எப்படி வேண்டுமென்றாலும் மாறும். இந்த வானிலையைத் தாக்குப்பிடிக்கவும் பயிற்சிகள் கொடுப்பார்கள். சில தடுப்பூசிகளும் போடுவார்கள். இந்த மாநாட்டில் ஒரு டாக்டரும், ஒரு மனநல மருத்துவரும் எங்களோடு இருப்பார்கள். நான் இந்தச் சவால்களைப் பற்றி பெரிசா யோசிக்லை. எது எப்படி இருந்தாலும், இந்தப் பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமா அமையும். அதை எதிர்பார்த்து காத்திருக்கேன்.” என்கிறார் புன்னகையுடன்.