வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள், விசேடதேவை அல்லாத மாணவர்களுக்கு இணையாக மாவட்ட மட்ட நடனப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்கள்.
இலங்கையின் சங்கீத, நடன மற்றும் பேச்சுக் கழகத்தினால் (Srilanka Festivel of Music Dance and Speech Forum) வருடாந்தம் இப் போட்டிகள் மாவட்டம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த வருடமும் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 09, 10 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதற்கான போட்டியாளர்களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்யும் நிகழ்வு (30.05) செவ்வாய்க்கிழமை அனுராதபுரம் சென். ஜோசப் கிறிஸ்த்துவ தேவாலயத்தின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் 13 நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
அத்துடன் இதில் வவுனியா சீட் வலுவூட்டல் வளாகத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களது 2 நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை மட்டத்தில் விசேட தேவை அல்லாத மாணவர்களிற்கு இணையாக பங்குபற்றி தமது திறன்களை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதில் மனோகரன் மயூரன் என்கின்ற மாணவர் மேலத்தேய தனி நடனப்போட்டியில் பங்குபற்றி 85 மேற்பட்ட புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
அத்துடன் மேலைத்தேய கிராமிய குழு நடனப்போட்டியில் சிங்கரவேல் தினேசன், ரஞ்சித்குமார் தக்ஷிலன், மோகன் கஜராஜ், மானோகரன் மயுரன், கொலம்பஸ் அனுசா, கொலம்பஸ் கொலன்டினா ஆகிய ஆறு மாணவர்களும் பங்குபற்றி 85 மேற்பட்ட புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொண்டதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.
இது அவர்களை பெற்ற பெற்றோர்களுக்கும். அவர்கள் கல்வி கற்று வரும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.
கடந்த 2000ஆம் ஆண்டில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களது கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்காக வவுனியா மாவட்டத்தில் தேக்கவத்தையில் ‘சீட்’ நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட சீட் – வலுவூட்டல் வளாகமானது கேட்டல் பேச்சு சிரமமுடைய மாணவர்கள், கற்றல் சிரமமுடையவர்கள் மற்றும் பல்வேறு விதமான உடல், உள நடத்தை பிறழ்வுகளை உடைய மாணவர்களின் உட்படுத்தலை இலக்காக கொண்டு தனது சேவையினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.
இவ்வளாக மாணவர்களின் 02 நிகழ்வுகள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்று அகில இலங்கை மட்ட போட்டிகளிற்கு தெரிவாகி உள்ளது.
அகில இலங்கை மட்ட வெற்றிகள் விசேட தேவைக்கு உட்பட்டவர்களின் திறமைகளிற்கான ஒரு அங்கிகாரமாக அமைவதோடு சாதிப்பதற்கு விசேட தேவை ஒரு தடையல்ல என்பதையும் மீள வலியுறுத்தி நிற்கின்றது.