காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திலுள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“எதிர்வரும் ஜூன் மாதம் நடராஜர் கோயிலின் ஆனித்திருமஞ்சன விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக பெருமளவான இலங்கைத் தமிழர்கள் சிதம்பரத்துக்கு வருகை தருவார்கள்.
எனவே இலங்கைக்கும், தமிழகத்துக்கும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த இப்போக்குவரத்து யுத்த காலத்தில் தடைசெய்யப்பட்டது. எனினும் தற்போது சுமூகமான நிலைமை காணப்படுவதால், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.