தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம் அன்னை பூபதி அம்மா அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுவிஸில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 21 ஆவது விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28 ஆம் திகதி லவுசான் மாநிலத்தில் Dorigny மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த் தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டு பண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டியில் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வன்மையாளர் போட்டிகள், பார்வையாளர் போட்டிகள் போன்ற அனைத்து விதமான போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
அத்துடன், இதில் பல விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிமீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன.
இதேவேளை, விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.