நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று (புதன்கிழமை) ஸ்பெயினுக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி மரியானோ ரஜோயை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்தியாவின் உட்கட்டமைப்பு, நகர மற்றும் ரயில்வே உள்ளிட்ட திட்டங்களுக்கு ஸ்பெயின் உறுதுணையாக இருக்குமென தான் நம்புவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இணையவெளி பாதுகாப்பு, விமானப் போக்குவரத்தில் தொழிநுட்ப ஒத்துழைப்பு, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் ஏழு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இதேவேளை, ஸ்பெயின் மன்னர் 6ஆவது ஃபிலிப்பையும், பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பின்னர், சுமார் 30 வருடங்களில் பின்னர் ஸ்பெயினுக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் என்ற பெருமை மோடியையே சாரும்.
இதேவேளை, ஸ்பெயின் விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை ரஷ்யாவைச் சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.