மேலதிகமாக செய்கை செய்யப்பட்டுவந்த 280 ஏக்கர் பயிர்ச்செய்கையை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய அனுமதிக்கப்பட்ட 850 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக பயிர்ச்செய்கையை அழிக்கும் நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
850 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கே இணைமடு குளத்தின் நீர் போதுமானதாக உள்ளது. ஆனால், மேலதிக நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை இடம்பெறுவதால் போதிய நீரின்றி பயிர்ச்செய்கை முற்றாக அழிவுறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு மேலதிகமான செய்கைகளை அழிக்க அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி செய்கை அழிப்பு நடவடிக்கையானது, கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் வே.ஆயகுலன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ந.சுதாகரன், பொறியியலாளர் செந்தூரன், பொலிஸார் மற்றும் விவசாய அமைப்புக்களின் அதிகாரிகள் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.