யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலைய சுற்றுவட்டாரத்தில் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நிலத்தடிநீரில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளானது வடக்கு திசையை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவதாக சந்தேகித்தால் அது தொடர்பில் சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு பொதுமக்களால் தெரிவிக்கப்படும் முறைப்பாட்டை சுற்றுச் சூழல் அதிகாரசபையானது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையுடன் இணைந்து பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் பரிசீலித்து அது தொடர்பில் அம்மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது