திருகோணமலை – மூதூர் மல்லிகைத்தீவில் மூன்று பெண் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையை கண்டித்து வாழைச்சேனையில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேரணி வாழைச்சேனை பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றுள்ளது.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி அருகில் ஆரம்பமான கண்டன பேரணி வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இதன்போது, பொலிஸ் மா அதிபருக்கான மகஜரினை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவிடம் பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் தலைவர் ம.ரஞ்சன் கையளித்துள்ளார்.
நிறுவனத்தின் தலைவர் ம.ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நல்லாட்சி அரசே எங்களது சிறுமியருக்கு நீதி கிடைக்குமா?, பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், காவல் துறையே எங்களது மாணவச் செல்வங்களின் பாதுகாப்பை உறுதி செய், போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபருக்கு வழங்குவதற்கான கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்படுவதாவது,
“எமது நாட்டில் பல்வேறுபட்ட பகுதிகளில் தினமும் குற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக அனைவரும் ஆராய வேண்டிய நிலையில் தற்கால சமூகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பயங்கரவாத வன்முறைகள், இன வன்முறைகள், அரச சொத்துக்கள் சேதப்படுத்தல், கொலை செய்தல், கொள்ளை அடித்தல், பாலியல் வன்கொடுமை, அதிகார துஷ்பிரயோகம், நிதி மோசடி, லஞ்ச ஊழல், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத ஆட்கடத்தல், போலி ஆவணங்கள் மூலம் காணி அபகரிப்பு போன்ற இன்னும் பல்வேறு குற்றச்செயல்கள் எமது நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று கொண்டே இருக்கின்றன.
இதில் மிகவும் மோசமான குற்றச்செயலென கருதப்படுவது சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோக குற்றமாகும்.
எமது நாட்டில் கடந்த 05 ஆண்டுகளில் ஆராய்ந்த வகையில் சிறுவர்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்கள் இதில் மிகவும் மோசமான முறையில் பாதிப்பட்டுள்ளனர்.
அன்று சேயா, வித்தியா வரிசையில் இன்று திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் மூன்று இளம் பெண் சிறார்கள் சில காடையர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி மூதூர் மல்லிகைத்தீவைச் சேர்ந்த வெரியவெளி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று இளம் பெண் சிறார்கள் அறநெறி வகுப்புச் சென்று வீடு திரும்பும் வழியில் இந்த கொடூர சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைச் செய்தவர்கள் சகோதர இனத்தைச் சேர்ந்த சில நபர்கள் என அறிகின்றோம். இந்த நல்லாட்சியில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது.
யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
இந்த சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் அந்த பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியினால் 03 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என உறுதியளித்தும் இதுவரை அவர்கள் கைதுசெய்யப்படவில்லை.
எதிர்காலத்தில் இலங்கையில் குற்றவாளிகள் தப்பித்து விடாது 24 மணி நேரத்தில் கைதுசெய்யப்பட பொலிஸார் புதிய உத்திகளையும், நவீன தொழிநுட்ப ரீதியான பயன்பாட்டினையும் பயன்படுத்த பொலிஸாருக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
எனவே இவர்கள் விரைவாக கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்லாத வகையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக நீதிமன்ற விசாரணை செய்து, கடுமையான தண்டனை வழங்குமாறு ஒட்டுமொத்த தமிழ் சமூகம் சார்பாக வேண்டுகின்றோம்.
மேலும், இதன் பிரதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர், உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஸ்ரீபவன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.