இளைய தமிழா என்ன ஆயிற்று உனக்கு.
எல்லாமும்
உருமாற்றப்பட்ட வெளிக்குள்
முறுக்குச் சாப்பிட்டுக்கொண்டு
போகிற சிறுவன்
எதேற்சையாக அந்த
தொப்பியை காண்கிறான்
கலர் மங்கிவிட்ட அதன்
மடியாத முன் விளிம்பில்
எம் குலதெய்வமொன்றின்
இரத்தக்கறை படிந்து கிடந்தது
அவன் அம்மா விரைந்து அதை
பறித்து வீசுகிறாள்
பார்த்தாயா தமிழா
பயம் நாசி தொடுகிறது
இன்னமும் நீ அடிமைப்படுத்தப்பட்டுத்தானிருக்கிறாய்
எதேற்சையாக
அழுத்தப்பட்ட மகனின்
தொலைபேசிக் காணொளியொன்றில்
கம்பீரம் தெறித்த எங்கள் வீரத்தின் பாடல்
ஒலிபரப்பப்படுகிறது
வளவில் பாத்தி மாறிக்கொண்டிருந்த
தந்தை சாரம் களன்றதைக்கூட பாராமல்
ஓடிவந்து அணைக்கிறார்
அவனை உதைக்கிறார்
பார்த்தாயா தமிழா..!
நீ அடக்கப்பட்டதன்
உச்ச வெளிப்பாட்டை
வைகாசியில் மின்சாரம்
இல்லையேல்
நீ விளக்கு கொழுத்த அனுமதியில்லை
கோவில் சென்றால்
மனதுக்குள் மட்டும்தான்
மணியடித்துத் திரும்பவேண்டும்
அரச மரத்தடியில்
புத்தர்கள் அமர்வார்கள்
ஏன் எதுக்கென கேட்க அதிகாரமில்லை
முடிந்தால்
ஒரு சோதனைச் சாவடியையேனும்
நீ கடக்காமல் தெற்கே சென்றுவா..?
முட்டாள் இளைஞனே..!
காதோடு காது வைத்தாற்போல்
நாம் இப்போதும் அடக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கிறோம்
பியர் போத்தல்கள் உடைகிற சத்தத்தில்
ஆட்லறிச் சத்தம் குறுகிப்போனது
உங்கள் உதைபந்தாட்டக்
கொண்டாட்டங்களில்
உழுத்த என்புகளும் உதிர்ந்து போயின
பிரித் ஓதலின் பேரரவத்தில்
காணாமல் ஆக்கப்பட்டவருக்காய்
கதறிய தாய்களின் அழுகை
பொலிவிழந்து போனது
மகிந்தவுடன் செல்பி எடுப்பதை
பெருமையாய் கொண்ட இளைஞர்களே!!
உங்களை பார்கிற போதெல்லாம்
தேசியக் கனவுக்கு தொழுநோய்
பிடித்துவிடுகிறது
ஏ9 தார்ச்சாலைகள்
உங்களுக்கு சுதந்திரத்தை
பறைசாற்றுகிறதா
அதற்கு கீழே வெறுங்காலோடு
ஓடிவந்த எம்மவர் பாதத்தடங்களும்
வீரர்கள் குருதியும்
நிரவிக்கிடப்பதை
நினைக்க மறக்காதே..!
யாழ் தேவி வந்தாச்சு
நமக்கென்ன சுதந்திரம் என்கிறாய்
இதே போல ஒரு மிடுக்கில்தான்
அன்று குமுதினியும் நகர்ந்தது..
இளைய தமிழா..!
சிப்பாய்களோடு சிங்களம்
பேசுவது சிலிர்ப்பாய்த்தான் இருக்கும்
மறவாதே சிங்கம் பசியெடுக்கும் வரையில்த்தான் பௌவ்யமாயிருக்கும்
பின்பு பலியெடுக்கும்
ஏன் வரலாற்றை அறிய மறந்தாய்
உனக்கு எம் வீரத்தை
கற்றுத்தரவல்லவர்கள் எல்லாம்
கைகட்டி நிற்கிறார்கள் என்றால்
எம்மவர் காணொளியை
பார்த்தேனும் வரலாற்றை படி
மறவாதே!! விதைகளை
பிளக்கும் வீரியம் பெற்ற நாற்று மட்டுமே
விருட்சமாகும்
மற்றவைக்கு ‘சப்பி’ என்று பெயர்
அனாதியன்