வெடி குண்டு மீட்பு முல்லைத்தீவு – திருகோணமலை தனியார் பேருந்தில்.
திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரை பயணித்த தனியார் பேருந்தில் ஒரு தொகை வெடிப்பொருட்களை கொண்டு சென்ற இருவரை முல்லைத்தீவு, சிலாவத்துறை சந்தியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரை பயணித்த குறித்த பேருந்தில் வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய காவல்துறை அதிகாரிகள் சிலர் வீதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு அந்த பேருந்தை சோதனையிட்ட போது வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து எட்டு அங்குல நீளமான 8 டைனமைட், 20 வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தும் மருந்துகள், 5 டைனமைட் குச்சிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது அப்துல் அசீப் ஹசன் மற்றும் ரகுமான் மஹ்துல்லா க்ரிஸ்வி என்ற புல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.