வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்து ஐ.நா சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு தீர்மானம் மற்றும், உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
வடகொரியா இதுவரையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமைமிக்க 9 ஏவுகணைகளையும் பரிசோதித்து பார்த்துள்ளது.
இதனை தொடர்ந்து வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும்,வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுடன் நேரடி தொடர்பில் உள்ள 15 தனி நபர்களுக்கு உலகளாவிய பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன.
இது குறித்து ஐ.நா சபைக்கான தென் கொரிய தூதர் சோ டாய் கூறுகையில், புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் வடகொரியாவின் தொழில் அதிபர்களும், அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், அந்நாட்டின் வணிக நிறுவனங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்த நடவடிக்கையை தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத திட்டங்களில் ஈடுபடுவதற்கு நிதி வழங்குவதை அது கட்டுப்படுத்தும் என நம்புவதாக கூறியுள்ளார்.
ஐ.நா-வின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்காவுக்கான ஐ.நா தூதர் நிக்கி கூறுகையில், வட கொரியா நடத்தும் ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் என இதன் மூலம் ஐ.நா கூறியுள்ளது.
வடகொரியாவுடன் அனைத்து நாடுகளும் ராஜ்யரீதியிலான உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும். அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.
வடகொரியா மீது ஐ.நா ஏற்கனவே 6 சுற்று பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த 7வது சுற்று பொருளாதார தடை அந்நாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.