அரசியல் தலையீடுமின்றி சுதந்திரமான நீதிவிசாரணை நடாத்தப்பட்டு, அதியுச்ச தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மூதூரில் இடம்பெற்ற மூன்று சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக இன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்று சிறுவர்கள் மீதான வன்முறைச்சம்பவங்கள், துஸ்பிரயோகங்கள், பெண்கள் மீதான அடக்கு முறைகள் போன்ற மனித உரிமை மீறல்கள் நல்லாட்சி வேடம் பூண்டுள்ள இந்த ஆட்சியிலும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்று இந்நாட்டிலே இடம்பெறுகின்ற இவ்வாறான சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு இந்நாட்டின் அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றச்செயல்களை செய்த குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்குரிய தண்டனையை வழங்காமல் இருப்பதனாலேயே இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன” என அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.