இனவாத வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
திருகோணமலை பெரியகடை ஜும்மா பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, இது போன்ற இனவாதச் சம்பவங்கள் மேலும் இடம்பெறாதிருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டேன்.
மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும், இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கிழக்கில் மூன்று இனத்தவர்கள் மத்தியிலும் ஆத்திரத்தையும் பகைமையும் வளர்த்து அதனூடாக தமது சதித்திட்டத்தை சாதிப்பதற்கு இனவாதிகள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.
அதற்கு நாம் இடமளிக்காமல் மூவின மக்களும் மேலும் ஒற்றுமையாக இருந்து எமது சகோதரத்துவத்தைக் காட்ட வேண்டிய தருணம் இது என்பதை நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும்” என நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.