பாகிஸ்தானுடனான சம்பியன்ஸ் கிண்ண கிரிகெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று காஷ்மீர் எல்லையில், சிதைத்து கொல்லப்பட்ட வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பியன்ஸ் கிண்ண தொடரின் 4வது போட்டி இந்தியா – பாகிஸ்தானிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இந்திய பாதுகாப்புப் படை வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை முற்றிலுமாக வெறுப்பதாக தெரிவித்துள்ள பிரேம் சாகரின் மகன் இஷார் சந்திரா, பாகிஸ்தானுடன் இந்தியா நட்பு பாராட்டக் கூடாது என்றும், எங்களது வலியை அரசு புரிந்து கொண்டு இப்போட்டி நடக்க விடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபைக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் இராணுவம், கடந்த மாத இறுதியில் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய படை வீரர்களான பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அவர்களது தலைகளைத் துண்டித்து, உடல்களை சிதைத்து பாகிஸ்தான் படையினர் கொடூர செயலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.