மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்படாததை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும் அஞ்சலி நிகழ்வும் நேற்று மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற குறித்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மறைந்த நாட்டுப்பற்றாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஐ.நடேசனின் திருவுருவப்படத்துக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராஜனாவினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களும் அதேபாணியில் இருந்துவருவது கவலைக்குரியதாகும்.
இலங்கையில் கடந்த காலத்தில் சிங்கள ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பிலும் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலும் இதுவரையில் ஒரு தமிழ் ஊடகவிலாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் தாக்கப்பட்டது தொடர்பிலும் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமை கவலையளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை குறித்து உடனடியாக விசேட பொலிஸ் குழுவொன்றினை அமைத்து விசாரணையை துரிதமாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருக்கான மகஜர்களும் இதன்போது கையளிக்கப்பட்டன.