டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் நேற்று ஒரு பக்க மீசை, தாடியை மழித்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் நேற்று ஒரு பக்க மீசை, தாடியை மழித்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டம் நீடிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 21–வது நாளாக நீடித்தது
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு பக்க மீசையை எடுத்தனர்
விவசாயிகள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் அமர்ந்து பாதி மொட்டையடித்து போராட்டம் நடத்தினார்கள்.
தங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் நேற்று ஒரு பக்க மீசை, ஒரு பக்க தாடியை மழித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தலைமையில் சுமார் 50 நேற்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியிலும், பஞ்சாபி மொழியிலும் கோஷங்களை எழுப்பினார்கள்.
தம்பிதுரை சந்திப்பு
மேலும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து போராட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசும், அ.தி.மு.க. (அம்மா) கட்சியும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு தருவதாகவும், பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதாகவும், அத்துடன் அவர்களுடைய கோரிக்கைகளை பிரதமரிடம் மீண்டும் கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு அய்யாக்கண்ணு, தங்கள் கோரிக்கைகளில் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற ஏதாவது ஒரு கோரிக்கையாவது நிறைவேறினால்தான் ஊருக்கு திரும்புவோம் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
அதன்பிறகு அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–மறுப்பு
தமிழகத்தில் வறட்சி நிலவுவதை மத்திய அரசு ஒப்புக்கொள்கிறது. விவசாயிகளின் கடனை ரத்து செய்ய பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும். பிரதமரிடம் பேசி எங்களை காப்பாற்றுங்கள். இல்லையென்றால் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம். இங்கேயே மடிந்தாலும் மடிவோமே தவிர, ஊருக்கு போகமாட்டோம்.
தமிழக முதல்–அமைச்சரும், துணை சபாநாயகரும் சென்று பிரதமரை சந்தித்து பேசினால் கண்டிப்பாக அவர் ஆவன செய்வார். தமிழக அரசு விவசாய கடன் ரூ.5,500 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டியது ரூ.7,000 கோடி மட்டுமே. இது மத்திய அரசுக்கு பெரிய தொகை கிடையாது. அ.தி.மு.க. தான் எங்களை தூண்டி விடுகிறது என்று பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அதனால்தான் எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். விவசாயிகளை அ.தி.மு.க. தூண்டிவிடவில்லை.
இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.