மனசு 10 ன் தொடர்ச்சி… குறிப்பிடக்கூடிய சில மாதங்கள் எங்கு திரும்பினாலும் என் தேசம் என் கண்களுக்கு இரத்தமும் பிய்ந்து போன சதை துண்டங்களுமாக காட்சி தந்தது. அவற்றை இழுத்து எரிக்கவோ அல்லது புதைக்கவோ கூட முடியாதவர்களாக மனசு முழுக்க வலிகளால் நிறைந்து கிடந்தோம். என் தாயகத்தில் சுதந்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் எங்கும் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தது சிங்கள தேசம். சிங்கள தேசத்தின் இராணுவம் தனது பாதங்களை பதித்து நிற்கும் கொடிய காட்சியைக் கண்டு மனது வெம்பியபடி இதுவரை இல்லாத வலியோடு இருபக்கமும் தொடர் நீளத்துக்கு அடிக்கப்பட்டிருந்த கம்பி வேலிக்குள் நடந்து கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் கடந்து வலதுபக்கம் ஒரு மரத்தை தாண்டிய போது பழைய நினைவு ஒன்று வந்து சேர்ந்தது.
அன்றொருநாள் நான் நினைக்கிறேன் 2007 ஆம் ஆண்டென்று. நானும் என் நண்பனும் முள்ளியவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம் அது ஒரு நண்பகல் வேளை என்பதால் சனநடமாட்டமோ வாகன போக்குவரத்துக்களோ மிகக் குறைவாக இருந்தது. ஓரிரண்டு உந்துருளிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. அந்த இடத்தில் தான் இரண்டு ஆண்கள் மது போதையில் வந்து மரத்தோடு மோதி இரத்தம் சிந்திய நிலையில் குற்றுயிராய் கிடந்தனர். மிகவும் கவலைக்கிடமாக அவர்கள் இருந்தார்கள் அவர்களுக்கு முதலுதவி கூட செய்ய முடியாத நிலை. கண்முன்னே அடிபட்டு வீழ்ந்தவர்களை எமது உந்துருளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. வந்த ஒரு ஆட்டோவில் அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நிலையில் இருந்த ஒருவரை ஏற்றி அனுப்பிவிட்டு கூடவே என் நண்பனையும் அனுப்பிவிட்டு, மற்றவரை ஏற்றுவதற்கு ஏதாவது ஒரு வாகனம் வருமா என்று இரண்டுபக்கமும் பார்த்துக் கொண்டிருந்த போது. ஒரு இராணுவ வர்ணம் பூசப்பட்ட கறுப்புக் கண்ணாடிகளாலான பஜூரோ ரக வாகனம் வந்தது. அது முக்கிய பொறுப்பாளர் ஒருவரது வாகனமாக இருக்க வேண்டும். அதற்குள் இருந்தவர் யார் என்று பார்க்க முடியவில்லை என்றாலும் மிக முக்கிய போராளி ஒருவருடையது என்று எம்மால் ஊகிக்க முடிந்தது.
ஆனாலும் வாகனம் எம் அருகில் நின்றதும் எந்த விசாரணைகளுமற்று காயமடைந்தவரை ஏற்றி கொண்டு சென்றதும். ஒவ்வொரு தமிழ்மகன் மீதும் எமது தளபதிகள் பொறுப்பாளர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள கூடியவாறு இருந்தது. தனக்கு ஆபத்துக்கள் இருப்பதை மறந்து ஒரு சாதாரண பொதுமகனுக்காக அந்த தளபதி தனது வாகனத்தை வீதியில் நிறுத்தினார் என்றால் எம்மக்களின் முன் தமது உயிர் துச்சம் என்ற நிலைப்பட்டை போராளிகள் கொண்டிருந்தார்கள் என்பதே நியம்.
இப்போது அந்த பொறுப்பாளரின் அல்லது அந்த வாகனத்தில் வந்த போராளியின் நிலை…? நான் அறியேன் ஒருவேளை அதே தமிழ் மகனுக்காக தனது உயிரை மண்ணுக்குள் விதையாக்கி இருக்கலாம் அல்லது விதையாக போக தயாராக இப்போதும் அனல் பறக்கும் ஆயுதத்தை தனது கரங்களில் வைத்துக்கொண்டிருக்கலாம். உடலில் வெடிமருந்தாடையை கட்டிக் கொண்டு எப்போதும் வெடிக்கத்தக்க வகையில் தயாராக இருக்கலாம். இவற்றில் எதுவோ ஒன்றுதான் நியமானதாக இருக்கும். மனது அந்த போராளியை நினைத்துக் கொண்டு நகர்ந்த போது, எனது முதுகில் ஏதோ ஒன்றால் அடித்ததுக்கான வலி எனக்கு எழுந்தது. திடுக்கிட்டு போய் நிமிர்கிறேன். கனரக ஆயுதங்களுடன் சில இராணுவத்தினர் நிற்கின்றார்கள். தொடர்ந்து என் முதுகில் அடி விழுந்தது. என் நாரிப்பக்கமும் அதற்கு கீழும் அவன் அடித்த வலி பயங்ரமாக இருந்தது. பெரிய தடி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தான். அவனுக்கு நாம் அடிமாடுகளை போல அல்லது விசர் நாய்களை போல தோன்றியிருக்க வேண்டும் அதனால் தான் மனிதமற்று அவ்வாறு செய்கிறான்.
தோழில் தலை சாய்த்து கொண்டிருந்த எனது மருமகன் வீறிட்டு அழுகிறான் அடுத்த அடி விழ முன் நான் முன்னே சென்றிருந்தேன் கடைக்கண்ணால் அந்த இராணுவத்தை பார்த்தேன் ஏதோ சிங்களத்தில் கத்தியவாறு முறைக்கிறான். நான் அடிபட்ட வலியோடு நடக்கிறேன். முன்பொருகாலம் இவர்கள் எங்களின் கரங்களுக்கு பயந்து ஓடிய போது நெஞ்சை நிமிர்த்தி நின்ற எம் தமிழினம் இன்று கூனிக்குறுகி, அடிவாங்கி, துன்பப்பட்டு, தனது மானமிழந்து, அடிமையாகி அவனின் காலடியில் விழுந்து நிற்கிறது. இதுவே பட்ட அடியை விட வலியைத் தந்தது.
பின்னால் யரோ அலறும் சத்தம் கேட்கிறது. அவன் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அடித்துக் கொண்டே இருந்தான். ஆண் பெண் வேறுபாடில்லை தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் அலறுவதும் அவனின் உறுமலும் செவிகளில் விழுந்து கொண்டே இருக்கிறது. மிக நீண்ட தூரம் எனது உறவுகளில் பலர் காயப்பட்டிருந்த காரணத்தால் நடக்க முடியாது தவிக்கிறார்கள். ஆனால் நடந்தே ஆக வேண்டும் நாம் நடந்து கொண்டே இருக்கிறோம்.
மாமா அப்பாவும் அம்மாவும் எங்க மாமா? வரமாட்டினமே? நான் தூக்கி வந்து கொண்டிருந்த என் மருகனின் 4 வயது நிரம்பிய சகோதரியான என் மருமகள் வினவுகிறாள். அவர்களின் நிலை என்ன என்பதை நான் அறியேன். எனது சிறிய தந்தையின் மகளான எனது தங்கை அவளை சமாதானப்படுத்துகிறாள். அம்மாவும் அப்பாவும் மருந்து கட்ட போயிருக்கினமல்லவா அவை மருந்து கட்டிட்டு வருவினம். அவளின் சமாதானத்தை அவள் நம்பவில்லை போல சின்னவள் அழுது கொண்டே வந்தாள். நாங்கள் செய்வதறியாது நடந்து கொண்டே இருந்தோம்.
இருபக்கமும் அடிக்கப்பட்டிருந்த கம்பி வேலி ஒரி இடத்தில் விரிவடைந்து பெரிய பிரதேசத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தது. நான் நினைக்கிறேன் அதுவே எமக்கான பொறிக்கிடங்கு வெட்டப்பட்ட பகுதி. அங்கு தான் எம்மவர் காணாமல் போனார்கள். அந்த பகுதிதான் எம்மவர்கள் துயிலுரியப்பட காரணமான பகுதி. இதுதான் நான் பலரை இறுதியாக கண்ட இடம். டேய் கவனமா போ எப்பவும் சின்னவன கீழ இறக்காத அவனைத் தூக்கி கொண்டே போ பயமில்ல, நீ பயப்பிடாத பாதர், நடேசண்ணையாக்கள் வெளிநாடுகளோட கதைச்சுத் தான் சரணடைய போறாங்கள். அதனால எந்த பிரச்சனையும் இருக்காது, நாங்கள் பாதராக்களோட போகப்போறம் என்று அறிவுரை கூறிய என் உறவுகளை பிரிந்த இடம். எமக்கு அப்போது எதுவும் புரியவில்லை. நாம் ஏதோ ஒரு பதட்டமாகவே காணப்பட்டோம். எங்கு பார்த்தாலும் எம் உறவுகள் குவிந்து கிடந்தார்கள்.
மஞ்சள் சிகப்பு வர்ணக் கொடிகளை உயரத்தூக்கி எம் தேசியக் கொடியினை எம் கரங்களில் உரிமையோடும் உணர்வோடும் அணைத்துக் கொண்டு தலைவனின் படத்தை நெஞ்சோடு அணைத்தபடி எம் பலத்தை சர்வதேசத்துக்கு சொல்வதற்காக அணியணியாக ஊர் முழுக்க “பொங்குதமிழாய் ” எழுந்து நின்றோமே… அந்த கூட்டம் நினைவுக்கு வந்தது.
அந்த உணர்வுகள் எல்லாம் செத்து உயிருடன் உறவாட ஏதோ எம் உடல் மட்டும் இயங்கிபடி அந்த பரந்து விரிந்து கிடந்த கம்பி வேலிக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கவோ, பேசவோ முடியாதவர்களாக தலையில் துண்டு அல்லது சாறத்தை முக்காடாக போட்டு மறைத்தபடி அந்த வெட்டைவெளியில் எதுவும் அற்ற நடைப்பிணங்களாக படுக்க தயாரானோம்.
தூக்கம் வரவில்லை ஒருபுறம் பசி மறுபுறம் தாகம் இன்னொருபுறம் எம்மைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் எறிகணை மற்றும் தாக்குதல்கள் எம் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்களை முற்றுமுழுதாக அழித்துவிடுமோ? அல்லது நடந்து கொண்டிருந்த சண்டையை உடைத்தெறிந்து போக வேண்டியவர்கள் போய் சேர்ந்திருப்பார்களோ? என்று வேதனை எழுந்தது.
அதே நேரம் இங்கே இனி என்ன நடக்க போகின்றது என்பது தெரியாத பயம் என்று பல உணர்வுகளோடு விழிகளில் இருந்து பயமும் கண்ணீரும் வழியக் காத்திருந்தோம். மாமா பசிக்குது மாமா… பேசமுடியாத மழலை தன் உதடுகள் பிரித்து அழுத குரலுக்கு எதையும் குடுக்க முடியாதவனாக மாமா செல்லத்துக்கு சாப்பாடு வாங்கி தாறனடா என்று அணைத்ததை இன்றும் மறக்க முடியாது வலிக்கிறது.
தொடரும்….
இங்கே பல சம்பவங்கள் இன்னும் எழுதப்பட வேண்டியவையாக இருக்கின்றன. அவை பல உறவுகளுக்கு வலி தருபவையாக இருக்கலாம். ஆனால் பதியப்பட வேண்டிய வலிகள் பதியப்படவேண்டும் அவை அடுத்த தலைமுறைக்கான எம் வலிகளை சொல்பவையாக திகழ்பவை அதனால் நான் எழுதுகிறேன். யாரையாவது மனம் வருந்த செய்திருப்பின் மன்னிக்க வேண்டும்…
நட்புடன் கவிமகன்.