இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லைபேரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக கூட்டத்தில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஈவிரக்கமற்றது. அதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். குறித்த தாக்குதல்களின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரித்துக்கொள்கின்றேன். அத்துடன், தற்போது அதிர்ச்சியில் மூழ்கியுள்ள பிரித்தானியாவுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல மேற்கு ஆபிரிக்க தலைவர்களுடன் பிரத்தியேக பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
பிரித்தானியாவை அதிரவைத்துள்ள இந்த தாக்குதல்களுக்கு பல உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளதோடு கடும் கண்டமும் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் மூன்று தாக்குதல்தாரிகள் உட்பட மொத்தம் 10பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், குறைந்தது 48பேர் காயமுற்றுள்ளனர்.
பிரித்தானியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்கள் உள்ள நிலையிலேயே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.