எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் பொன். சிவகுமாரனின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று காலை யாழ். உரும்பிராயிலுள்ள அவரது நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்களிடையே பேதங்கள் எதுவுமிருக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும் என வீர ஆவேச முழக்கமிட்டார்.
எங்களுடைய தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர் சமுதாயத்திலிருந்து உருவாகியதொரு விடுதலை உணர்வாளர் தான் பொன். சிவகுமாரன். அன்றைய பிரதமராகவிருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தலுக்கெதிராக எழுச்சி கொண்ட மாணவர் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் முக்கிய தலைவராக அவர் விளங்கினார்.
தியாகி சிவகுமாரன் தரப்படுத்தலுக்கெதிராகப் பாடசாலைகள் தோறும் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்தில் அந்தப் பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
1971 ஆம் ஆண்டு வல்வெட்டி சிதம்பராக் கல்லூரியில் அவர் நடத்திய பிரச்சாரத்தில்,
“இனிவரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் அகிம்சை வழியில் போராட முடியாது. ஆயுத வழியில் தான் போராட முடியும்” என அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது அந்தக் கல்லூரியில் நான் 09ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
அவரைப் பார்த்து ஆயுதங்கள் எங்கேயிருந்து வரும் எனக் கேட்டேன். அதற்கு அவர் கைக்கடிகாரங்கள், புடவைகள் என்பன வல்வெட்டித்துறைக்கு எவ்வாறு வருகிறது? அதேபோன்று ஆயுதங்களையும் இங்கே கொண்டு வர முடியும் என்று கூறினார்.
தியாகி சிவகுமாரனும் காட்டிக் கொடுப்பினால் தான் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவிற்கு மயிலிட்டியூடாகப் படகில் பயணம் செய்வதற்குப் பணத்தை வாங்கியவர் ஏமாற்றி விட்டார். அதனால், அவர் மிகவும் துன்பப்பட்டார்.
அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அவரைச் சந்தித்து வல்வெட்டித் துறையூடாக உங்களை இந்தியாவிற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறிய போது நான் சில வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டியுள்ளதாகவும், எங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
ஆனால், அவர் துரதிஷ்டவசமாக கோப்பாயில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது.
கிடைத்தவுடன் அவரது வீட்டிற்கு விரைந்தோம். அவர் இறந்து மூன்றாம் நாளில் உரும்பிராய் வேம்பயன் மயானத்தில் தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், வி. என். நவரத்தினம் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாகத் தனது இன்னுயிரை ஆகுதியாக்கி ஆரம்பித்து வைத்த அவரது தியாகம் பின்னர் ஆயுதப்போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி ஆயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்வதற்கு வழி வகுத்தது.
அதன் பின்னர் தியாகி பொன் .சிவகுமாரனின் வழியில் ஆயுத விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தளபதி குட்டிமணி இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்ட போது ‘என்னைத் தூக்கிலிடுங்கள்…ஆனால், என்னுடைய உடலை விடுதலைப்புலிகளிடம் கையளியுங்கள்.
ஒரு குட்டிமணி போனாலென்ன? இன்னும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குட்டிமணிகள் உருவாகுவார்கள் என்று குறிப்பிட்டார். அதேபோன்று பின்னாளில் ஆயிரக்கணக்கான குட்டிமணிகள் எமது மண்ணில் உருவானார்கள்.
பொன். சிவகுமாரனின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் அவரது ஞாபகார்த்தமாக ஈழ விடுதலை இயக்கம் எனும் பெயரில் ஓய்வுநிலை நீதிபதி – தம்பித்துரையின் மகன் பொன். முத்துக்குமாரசாமியினால் அவரது உருவச் சிலை நிறுவப்பட்டது. இதன் பின்னர் இரு தடவைகள் அரச படைகள் அவரது உருவச் சிலையை இடித்துச் சேதமாக்கியது.
ஆனால், தமிழ்மக்கள் விழ விழ எழுந்து நிற்பது போன்று சிவகுமாரனின் சிலையும் தற்போது கம்பீரமான முறையில் எழுந்து நிற்கிறது.
ஆகவே, தமிழ் மக்களுடைய விடுதலைக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி சிவகுமாரன், ஆயிரக்கணக்கான மாவீரர்கள், இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆகியோருக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி என்பது அவர்கள் விட்டுச் சென்ற விடுதலை உணர்வுகளை, கனவுகளை வென்றெடுப்பதேயாகும். தமிழீழ தாயகத்தில் சுயாட்சியை நிறுவுவது தான் இதற்கான ஒரே வழி. தமிழரின் தாகம்….தமிழீழத் தாயகம்….என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.