சிறுமிகளுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து இன்று (5) ஆரம்பமான நீதி கோரிய ஆர்ப்பாட்ட பேரணியானது பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிற்கதவு வரை சென்றது.
‘நாமத்தில் மட்டும் நல்லாட்சியா!, நீதி வேண்டும் பெண்கள் நீண்டு வாழ, பிஞ்சுகளை வதைக்கும் நஞ்சுகளை தூக்கிலிடுங்கள், மெட்டுக்களை மலர விடுங்கள்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்கம் இறுதி ஆண்டு மாணவர்கள் வரை கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் வடகிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இவ்வாறான பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் என்றும் எதிர்ப்பினை தொடர்ந்தும் தெரிவித்து, உரிய நீதிகோரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் இவ்வாறான சமூகம் சார்ந்த விடயங்களை கருத்தில்கொண்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.