வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி இன்று காலை விஜயம் மேற்கொண்டார்.
புளத்சிங்கள, யட்டிகம்பிட்டிய, நாகஹதொல பிரதேசங்களுக்கு சென்ற ஜனாதிபதி, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
பாஹியன்கல மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நாகஹதொல கங்கை தடைபட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பிலும் மண் மேடு சரிந்து விழுந்தமையினால் தடைப்பட்ட நாகஹதொல கங்கையை மீளவும் சீர்படுத்துவது தொடர்பிலும் விரைவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு, மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அந்தப் பகுதி மக்கள் மற்றும் பிள்ளைகளின் சுகாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசத்தில் அழிவடைந்த வீடுகளுக்கான புதிய நிர்மாணிப்புகளை மேற்கொள்வதற்கு அவசியமான இடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றுவதற்கு இடம் பொருத்தமானதா என ஆராய்ந்த பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.