வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நிலையில் இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனக் குறித்த குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த அமைச்சர்கள் ரயில் செலுத்தும் பணியையோ அல்லது தண்டவாளம் இடும் பணியையோ மேற்கொள்பவர்கள் அல்ல.
ஆனால், அவர்கள் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வது தான் உண்மையான ஜனநாயகப் பண்பாகவுள்ளது.
ஆனால், வடமாகாண சபையில் நிதி மற்றும் நிர்வாக ரீதியான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, காலதாமதமின்றி குறிப்பிட்ட இரு அமைச்சர்களும் உடனடியாகப் பதவியை இராஜினாமாச் செய்வதன் மூலமே ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
நான் கடந்த மூன்று வருட காலமாகத் தொடர்ச்சியாக சபையில் கூறி வந்த விடயங்கள் வெற்றியளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சரால் அமைக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவினரால் விசாரணை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை அமையப் பெற்றிருக்கிறது.
வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எம்மால் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்டாலும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாங்கள் வடமாகாண சபையில் விவாதித்த போது தன்னால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி நான் செயற்படுவேன் என உறுதிமொழி வழங்கியிருந்தார்.
அந்த உறுதிமொழியை அவர் காப்பாற்றுவார் என நம்புகின்றேன். விசாரணைக் குழுவின் அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு வடமாகாண முதலமைச்சருக்கு இருக்கின்றது.
பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனில் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயகக் கடமையிலிருந்து அவர்கள் தவறி விட்டனர் என்பதே நிஜம்.
ஆகவே, அவர்கள் உடனடியாகத் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.