இனவாத கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரரை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளமொன்றில் ஞானசாரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தம்மை கைதுசெய்வதற்கு முன்னர் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பொலிஸாருக்கு அஞ்சி தான் செயற்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தெற்கைச் சேர்ந்த தன்னை, முடிந்தால் மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ்மா அதிபர் கைதுசெய்து காட்டட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். அத்தோடு, தம்மை கைதுசெய்தால் அதற்கான ஆயத்தங்களுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் செயற்படும் ஞானசாரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளதோடு, இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ்மா அதிபரும் கூறியிருந்தார். இந்நிலையில் ஞானசார தேரர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.