மலையக அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டறிந்து செயற்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதென இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு நேரத்தில் நிம்மதியற்ற நிலையில், எந்த நேரத்தில் மண்சரிவு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இம்மக்களுக்கு மலையக அரசியல்வாதிகள் இதுவரை காலமும் எவ்வித தீர்வும் வழங்காமல் மழைக்காலங்களில் மாத்திரமே வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.
இத்தோட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 91 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22 வீடுகள் நிர்மாணித்து தருவதாக கூறி கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவர் அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். இதற்கு என்ன நடந்தது என்பது கூட தெரியவில்லையென இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் பொறுபேற்ற பின் பொறுப்பான அமைச்சர் ஒருவரிடம் மனு வழங்கிய போதிலும் இதுவரை அவரும் கண்டுகொள்ளவில்லை என இம்மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட தமக்கு வெகு விரைவில் வீடுகளை அமைத்து தங்களுடைய உயிர்களை காப்பாற்றுவதற்கு மலையக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோருகின்றனர்.