இரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர்.
கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது.
தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ளதாக லண்டன் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏழு உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவன் முக்கிய குற்றவாளி என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் இருவரின் பெயர்களை லண்டன் போலீசார் வெளியிட்டுள்ளனர்.குராம் ஷாஸத் மற்றும் ராசித் ரெடவுனே ஆகிய இருவரின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதில், குரான் ஏற்கனவே ஐ.எஸ் இயக்கத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்டிருந்தார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.