மன்னார் – பெரியபண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலை! ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தையே இன்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.
ஐ.நா. வதிவிட நிறுவனத்தின் அமுல்படுத்தலின் கீழ், ‘மன்னார் மாவட்டத்தில் கற்றல் சூழ்நிலையை மேம்படுத்தும் சமூக இயக்கத்தின் ஊடாக நிலைத்து நிற்கக்கூடிய மீள் குடியமர்தல்’ எனும் திட்டத்தினூடாக பாடசாலை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 5 வரை சுமார் 126 மாணவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி கடந்த காலங்களில் ஓலையினால் வேய்ந்த வகுப்பறையில் கல்வி கற்று வந்தனர்.
ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு இடர்களை சந்தித்து வந்த நிலையில் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் புதிய வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட சகல விதமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட்ட குறித்த பாடசாலையின் கட்டடத்திறப்பு விழாவில் நான் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
குறித்த பாடசாலை கட்டடத்தை யூ.என்.கெபிட்ட நிறுவனம் மிகவும் சிறப்பான முறையில் கட்டி முடித்துள்ளது.
இலங்கை நாட்டின் கட்டமைப்பு கடந்த காலங்களில் பாரியளவில் அழிவடைந்து காணப்பட்டது. தற்போது இலங்கை நாடு பாரிய வளர்ச்சிப்பாதையில் செல்கின்றது எனவும் கூறியுள்ளார்.
அந்த வகையில் மாணவர்களாகிய நீங்கள் நாட்டிற்கு கிடைக்கின்ற உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றி முன்னேற வேண்டும்.
மாணவர்களாகிய நீங்கள் எமது நாட்டு மக்களின் கலாச்சாரம், மற்றும் மக்களின் திறமைகள் குறித்து அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இலங்கையின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே தங்கியுள்ளது என்பதனை கூறிக்கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சிறுவர்களாகிய உங்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது. இலவச கல்வியை நல்ல முறையில் கற்று உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் போது ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா, தூதரின் பாரியார் அகிகோ சுகனுமா,ஜப்பானிய தூதரகத்தின் செயலாளர் சுகுரு இரியமா, ஐ.நா. வதிவிடத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜணக தல்பஹிவா, மடு வலயக்கல்விப்பணிப்பாளர் எல்.மாலினி வெனிற்ரொன், மடு பிரதேசச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.