நிலவைத் தின்றவர்கள்……
இருளின் அடர்த்திக்குள்
உணவருந்திப்பழகியவர்களுக்கு
மண் கடிபடுதல்
சிரமமாக இருந்ததில்லை
பல நாட்கள் அவர்கள்
மண்ணில் சோறு போட்டே உண்டிருக்கிறார்கள்
இருளின் அடர்த்திக்குள் வாழ்பவர்கள்
எதிலுமே பற்றில்லாமல்
இருப்பதற்கு அவர்கள் ஞானிகள்
என்று பொருளல்ல
அவர்கள் பெறுமதியாய் எதையும்
அதுவரை கண்டிருக்கவில்லை
இருளின் அடர்த்திக்குள் வாழ்பவர்களை
எவரும் காதலிக்கவில்லை
ஆனாலும் அவர்கள் தங்களை
அழகாகவே எண்ணிக்கொள்வார்கள்
அவர்கள் வார்த்தைகளையே
அன்பென நம்பினார்கள்
இருளின் அடர்த்திக்குள் வாழ்பவர்கள்
ஏமாற்றப்படுகிறார்கள்
அவர்கள் தங்களை தாங்களே
குத்திவிட்டு யாரோ கொலை செய்து விட்டதாக உரத்து கத்திவிட்டு
இறந்துபோய்விடுவார்கள்
ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழும் அவர்கள் சந்தேகம் கொள்வது ஆச்சரியமல்ல யாரேனும் சிறு வெளிச்சத்தோடு அவர்களை நோக்கி செல்ல முற்பட்டால் அவர்களை
சாத்தான்கள் என நம்பினார்கள்
இருளின் அடர்த்திக்குள் வாழ்பவர்களை நோக்கி ஒருநாள் பௌர்ணமி இறங்கி வந்தது அதை அவர்கள்
அதி பயங்கர மிருகமென எண்ணினார்கள்
பௌர்ணமி வெளிச்சத்தில்
ஒருவரை ஒருவர் பார்த்து பயந்தார்கள்
அவர்களி புசித்த உறுப்புக்களை
அருவருப்பாக நோக்கினார்கள்
அந்த நேரம் புணர்ந்துகொண்டிருந்தவர்களுக்கு
வாந்தி வந்தது
உணவருந்தியவர்களுக்கும்தான்
இருளின் அடர்த்திக்குள் வாழ்ந்தவர்களுக்கு நிலவின் மீது கோபம் வந்தது இப்படியேவிட்டால் தங்கள் அசிங்கத்தை எல்லோரும் பார்த்துவிடக்கூடுமென அஞ்சி
கொஞ்சம் கொஞ்சமாய்
நிலவைத் தின்றுவிட்டார்கள்
அனாதியன்