பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று பட்டதாரிகள் வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் சுமார் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பட்டதாரிகள் இதுவரை வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத மத்திய மாகாண அரசாங்கங்களைக் கண்டித்துப் பல்வேறு பதாதைகளை தாங்கியிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
நாம் இன்று நூறாவது நாளாக எமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் எமக்கான தீர்க்கமான தீர்வுகள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. எங்களை யாரும் திரும்பிக் கூடப் பாரப்பதாகத் தெரியவில்லை.
ஜுலை மாதம் எமக்கான தீர்வு வழங்கப்படுமெனப் பிரதமர் உறுதிமொழி வழங்கிய போதும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? என்பதில் கூட சந்தேகமே நிலவுகிறது.
ஒரு வருடமானாலும் நாங்கள் தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை.
வடமாகாணத்திலுள்ள 3500 வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உறுதியான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை நாம் ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் ஜுலை மாதத்தில் ஏற்கனவே பிரதமரால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் குடும்பம் நடத்த வேண்டி வருமெனவும் எச்சரித்துள்ளனர்.