தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு நடக்கின்ற அநீதிகளுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் அவா் மேலும் தெரிவிக்கையில்,
”நான் கடந்த 30 வருடங்களில் யுத்தத்தினை நன்கு உணர்த ஒரு பிக்கு. நான் விடுதலைப் புலிகளின் காலத்தில் அதாவது யுத்தம் நடைபெற்ற காலத்தில் நான் இங்கு இருந்தேன். அந்தகாலத்தில் நான் வாகரை, போரைத்தீவு, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளேன். அங்கு சென்ற நான் விகாரைகளைப் புனரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடமிருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன்.
அந்தகாலத்தில் நாம் அவர்களுடன் மதம் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொண்டு, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அதன்போது எவரும் என்னை விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.
தற்கால அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உட்படபலர் எம்மீது குற்றகுற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர்.
யுத்த காலத்தில் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த இரண்டாயிரம் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக நாட்டை ஆட்சி செய்துவரும் அரசியல்வாதிகளிடம் பல சந்தர்ப்பங்களில் விவாதத்தில் ஈடுபட்டேன்
அப்போது, தமிழ் மக்களின் தலைவர்கள் என சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என் மீது குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விகற்பதற்கான திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்த 400 ஏக்கர் காணியை மக்களுக்கு வழங்காமல் திறந்த பல்கலைக்கழகம் கட்டுவதற்கு சட்டம் எப்படி இடம் கொடுத்தது?
தமிழர்களின் தலைவர்கள் என தெரிவிக்கும் வடக்கு மாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரால் இதனை நிறுத்தமுடியுமா?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்கமா? – கிழக்கு பறிபோயிருக்குமா? எதிர்கலத்தில் நாட்டிற்கு சுபீட்சத்தினை பெற்றுக் கொடுக்க பிரபாகரனே மீண்டும் வர வேண்டுமோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. ஏன் என்றால் அன்று மக்களை விற்று பிழைப்பு நடத்தும் எவரும் இருக்கவில்லை. யுத்த காலத்தில் இல்லாத விளையாட்டுக்கள் தற்போது இடம்பெறுகின்றன. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வைத்துக்கொண்டு, அவர்களைக் காட்டி பலர் இலாபம் பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட பெற்றோா், பிள்ளைகள், சகோதரர்கள் இன்றும் துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவர்கள் குறித்து ஒருவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
இறந்தவர்கள் தொடர்பில் பொய்யாகச் சண்டை பிடித்துக் கொண்டு தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றாா்கள். இன்று தமிழ் மக்களின் காணி வீடு, தொழில் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்தவரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனவே நல்லாட்சியின் தலைவர்கள் எங்களுடன் சேர்ந்து இந்த மக்களுக்கு சேவை செய்ய தயாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.