தமிழ் ஆதரவாளர் திருமுருகன்காந்தியின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் 08-06-2017 ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 10.00 மணிக்கு யாழ். பேருந்து நிலையம் முன்பாக மேற்படி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், துணிந்து தமிழருக்கான நீதிக்கான போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பவர்களில் தமிழகத்திலிருந்து எமக்காக குரல்கொடுக்கும் ஈழ உணர்வாளர்களில் திருமுருகன்காந்தியின் பங்கும் பணிகளும் மிகவும் இன்றியமையாதன.
ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடிவரும் திருமுருகன்காந்தி, கடந்த மே மாதம் தமிழக மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நிகழ்த்தியமைக்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களுக்காக ஓய்வுறக்கமின்றி போராடி வருபவர்களில் ஒருவரான திருமுருகன்காந்தியின் விடுதலைக்காக போராட வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும். எனவே அவரது விடுதலையை வலியுறுத்தி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.