கல்வி வளர்ச்சிக்கு வசதி படைத்தோர் பக்கபலமாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டியிலுள்ள தன்னார்வ தொண்டு அமைப்பின் கலையார்வ செயற்பாடுகளை நேரில் அறிந்து கொள்வதற்காக இன்று அங்கு சென்றிருந்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை வலியுறுத்தினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்விக்கான முதலீடு என்பது நீண்ட காலத்திற்குரியதாகும். அந்த முதலீட்டின் மூலமாக நிலைத்து நிற்கக்கூடிய சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்ள முடியும்.
எனவே 30 வருட போரால் பாதிக்கப்பட்ட நாம் கற்போம், கற்பிப்போம், கல்வியால் உயர்வோம், நிலையான அபிவிருத்தியினை எய்துவோம் என்று திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
தமிழரின் பாரம்பரிய இசை, நடனம், நாட்டுக்கூத்து போன்றவற்றுக்கான பயிற்சிகளில் தமிழ் மாணவர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதும் பாராட்டத்தக்கது” என ஞானமுத்து ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்தார்.