தீபச்செல்வன்! ஈழத்து எழுத்தாளர் எழுதிய தமிழர் பூமி என்ற புத்தகத்தின் வெளியீடு இலங்கை அரசின் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த புத்தகத்தில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா? இல்லை தொடர்ந்தும் அதன் விநியோகத்தை தடுத்து வைப்பதா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் யாழ். சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நூலில் நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2009 இற்கு பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை பற்றியும் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான “எதிர்வெளியீடு” என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.