பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கல்கியின் புதினம் சிவகாமியின் சபதம். அக்காலத்தில் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சி மாநகரம்.
காஞ்சிபுரம் கல்வியில் சிறந்த நகரமாக இருந்துள்ளது. அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் கல்வி கற்க காஞ்சியை முற்றுகையிட்டுருந்த காலம் அதுஇ மகேந்திர பல்லவரும் நரசிம்ம பல்லவரும் வாழ்ந்த காலம் (ஏறக்குறைய கி.பி 630)இ சிவகாமியின் சபதம் கதையின் காலம்.
பாலாற்றின் கிளையான வேகவதி ஆறு இன்று இருந்த இடம் தெரியாமல் உள்ளது. இதன் பெருமையை இந்த புதினத்தின் மூலமே அறிந்துகொண்டேன். சரித்திரப் புகழ் பெற்ற இந்த ஆறு ஒரு காலத்தில் காஞ்சிக்கு அரணாக விளங்கியிருக்கிறது. என் காலத்தில் ஒரே ஒரு முறை அதில் நீரை நான் பார்த்துள்ளேன். இனி அதில் நீர் வருமா என்பது சந்தேகமே. ஆற்றின் மையத்திலேயே குடியிருப்புகள் வந்துவிட்டன.
இப்போது சிறந்த சுற்றுலாத் தலமாக விளக்கும் மகாபலிபுரத்தின் மற்றொரு பெயர் மாமல்லபுரம். மாமல்லர் நரசிம்மப் பல்லவரின் பெயரில் அமைந்த ஊர்தான் இது. இதுநாள் வரை எனக்கு அந்த ஊரின் பெயருக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது. மல்லர் என்றால் அரசன்இ மல்லர்களையெல்லாம் வென்றவர் மாமல்லர். அவரின் பெயரிலே அமைந்தது தான் அது மாமல்லபுரம்.
நரசிம்ம பல்லவர் சிறுவயதில் அங்குள்ள கற்களையெல்லாம் பார்த்து விட்டு இது சிங்கம் இது யானை என தெரிவித்தாராம். அவரின் ஆசையை நினைவாக்கி அக்கற்களை அவர் சொன்னது போலவே செதுக்கினாராம் அவரின் தந்தை மகேந்திர பல்லவர். பிறகு நரசிம்மப் பல்லவரின் பெயரையே அவ்வூருக்கு வைத்துவிட்டாராம்.
மாமல்லபுரத்து ஐந்து ரதம் பற்றி இப்புத்தகத்தின் மூலம் நான் அறிந்த போது மிகவும் வியப்பாக இருந்தது. அக்காலத்து சான்றோர்களின் பரந்த மனப்பான்மையை எனக்கு உணர்த்தியது. ஐந்து ரதத்தின் ஒவ்வொரு ரதத்திலும் சைவஇ வைணவஇ புத்தஇ சமண மற்றும் கிறித்துவ சிலைகளை வைக்க நினைத்தாராம் மகேந்திர பல்லவர். அவர் சமண சமயத்தில் இருந்து திருநாவுக்கரசரால் சைவ சமயத்திற்கு மாறியவர். இருந்தாலும் அனைத்து சமயத்தினரையும் ஒருங்கே பார்க்கும் தன்மை கொண்டவராய் இருந்துள்ளார்.
திருநாவுக்கரசரும் பல்லவர்களின் காலத்தில் தான் வாழ்ந்துள்ளார். அக்காலத்தில் புத்தமும் சமணமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்துள்ளது. ஆனால் திருநாவுக்கரசர் மூலம் புத்த சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் பலரும் சைவ சமயத்திற்கு மாறியுள்ளனர்.
மகேந்திர பல்லவர் ஒர் காலரசிகர். அவர் காலத்தில் காஞ்சியில் கற்கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றான கைலாசநாதர் கோயில் மிகவும் சிறப்புவாய்ந்தது. இக்கதையில் ஏகாம்பர நாதர் கோயிலும் வருகிறது. அக்காலத்தில் இருந்த மிகப் பெரிய கோயில்களில் அதுவும் ஒன்று. இக்கோயில்கள் தமிழனின் கட்டிட தொழில்நுட்பத்திற்கு நற்சான்றாகின்றன.
இக்கதையின் இரண்டு பாகங்களைப் படித்தப்பின்னும் கூட கதையின் தலைப்பு எங்கேயும் வரவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் மூன்றாம் பாகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போதுதான் சிவகாமின் சபதம் வந்தது.
சிவகாமி நடனத்தின் ராணி. ஆயனர் என்ற மகா சிற்பியின் மகள். சிவகாமியைப் பற்றி படிக்கும் போது எனக்கு ஒரு பாடல் நினைவு வரும் –
‘சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்
பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்
கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்
காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்…’
இந்தப் பாடலில் வரும் சிலை சிவகாமியின் சிலைதான். சிவகாமியும் மாமல்லரும் சிறு வயதில் இருந்து பழகியவர்கள்.
ஒரு கட்டத்தில் கதையின் நாயகன் மாமல்லரும் சிவகாமியும் காதலர்கள் ஆகின்றனர். ஆனால் அவர்களுக்கு இடையில் நிற்பது ஆட்சி பொறுப்பு. சாதரண மக்கள் தாங்கள் விரும்பம்போல் திருமணம் செய்யலாம். ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் அரசியலை மையமாகக் கொண்டுதான் திருமணம் செய்யவேண்டுமாம். எனவே இவர்களின் காதல் கனவோடு நின்றுவிட்டது.
இங்கே சாதாரண மனிதனாக வரும் பரஞ்சோதிஇ தன் வீரப் பராக்கிரமங்களால் சேனாதிபதி ஆகிறான். ஆயனர் என்ற ஒரு மகா சிற்பி கதையில் வருகிறார். அவர்தான் தன் சிற்றுளிக் கொண்டு அழியாக் கலைச்செல்வம் மாமல்லபுரத்தை செதுக்கியவர். கதை முழுதும ஆயனரின் எண்ணம் அஜந்தா குகையின் வர்ண ரகசியத் தெரிந்துகொள்வதிலேயே வட்டமிடுகிறது.
அது என்ன அஜந்தா வர்ண ரகசியம். அஜந்தா பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பழமையான குகை ஓவியங்கள் உள்ளன. அவற்றின் வர்ணம் இன்னும் அழியாமல் உள்ளன. அதற்கு காரணம் என்ன. சாதரணமாக பூக்களில் இருந்தும் இலைகளில் இருந்தும் எடுக்கப்படும் வர்ணங்கள் இயற்கையால் அழியக்கூடியன. (இக்காலத்தில் உள்ளது போல அக்காலத்தில் இரசாயன வர்ணங்கள் எல்லாம் இல்லை). ஆனால் அஜந்தாவின் வர்ணங்கள் பல்வகை நிறப் பாறைகளைத் தூளாக்கி அவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்பட்டன. அதனால் தான் இன்று வரை அவை அழியாமல் உள்ளன.
கதையின் முக்கிய கதாப்பாத்திரம் நாகநந்தி அடிகள் என்னும் புத்த பிஷு. சிவகாமியின் நடனத்தில் மயங்கி அவளுக்காக எதுவும் செய்யத் துணிந்தவர். கதையின் முக்கிய வில்லன் இவரே. வாதாபி (கர்நாடகா) அரசன் புலிக்கேசியின் அண்ணன். காஞ்சியின் மீது புலிக்கேசி படையெடுக்க அனைத்து உதவிகளும் புரிந்தவன் இந்த நாகநந்தி. ஆனால் மகேந்திர பல்லவர் நாகநந்தியின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்தார்.
கடைசியாக மாமல்லர் பல்லவ சைனியத்தால் வாதாபியைத் தோற்கடித்து சிவகாமியின் சபத்தை நிறைவேற்றுகிறார்.