கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் ஊடுறுவி பொய்யான தகவல்களை வெளியிட்டவர்கள் ரஷ்யாவின் ஹெக்கர்ஸ்களாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு நெருக்கமான மத்திய கிழக்கு நாடுகளிடையே நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக ஹெக்கர்கள் போலி செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஊடுறுவல் சம்பவம் தொடர்பில் கட்டார் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு உதவுவதற்காக சமீபத்தில் அமெரிக்க FBI குழு ஒன்று டோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கமைய இரு வாரங்களுக்கு முன்னர் கட்டார் அரசாங்கத்தால் முதலில் பதிவு செய்யப்பட்ட ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய ஹெக்கர்கள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிராந்தியத்தின் மிகப் பெரிய அமெரிக்க இராணுவ தளங்களில் ஒன்றை கட்டார் இயக்கி வருகின்றது.
ரஷ்ய ஹெக்கர்களின் ஈடுபாடு அமெரிக்க உளவுத்துறை மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களின் கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நட்பு நாடுகளில் இதே இணைய- ஊடுறுவல் நடவடிக்கைகளை ரஷ்யா தொடர்வதாகவும், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களிலும் இந்த ஹெக்கர்கள் தலையிட்டிருக்கலாம் என உளவுத்துறை நிறுவனங்கள் நம்புகின்றன.
அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்துவதே ரஷ்யாவின் இலக்கு என தோன்றுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில், ரஷ்ய சைபர் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ள நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற நாடுகளின் தேர்தல்களில் உட்பட போலி செய்தி வெளியிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் சவுதி அரேபியாவுக்கு எதிரான தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுவே கட்டார் பிரச்சினைக்கு பிரதான காரணமாக இருக்கலாம் நம்பப்படுகிறது.
இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 5 நாடுகள் கட்டாருடான ராஜதந்திர உறவுகளை துண்டித்திருந்தன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து நில, கடல் மற்றும் விமான எல்லைகளையும் மூடி, கட்டார் பயங்கரவாதக் குழுக்களுக்கும் ஈரானுடனான அதன் உறவுகளுக்கும் ஆதரவு கொடுத்ததாக குறித்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
சமீபத்திய இராஜதந்திர நெருக்கடியைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக கட்டார் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.