எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்க்க முடியாதவர்களாக தத்தளித்துக் கொள்ளும் போது, எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகின்றோம் என்ற கேள்வி எழவே செய்யும்.
எதுவாயினும் வடக்கு மாகாணத்துக்கு நேர்மையான – நீதியான முதலமைச்சர் ஒருவர் கிடைக்கப் பெற்றுள்ளார்.
அவரை நம் முதலமைச்சராகக் கொண்டு எங்கள் மண்ணில் செய்ய வேண்டிய அத்தனை அபிவிருத்தி வேலைகளையும் செய்ய வேண்டும். செய்திருக்க வேண்டும்.
எனினும் நாம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களை முன்னிலைப்படுத்தி எங்கள் இனத்தின் உயர்வுக்காக – முன்னேற்றத்துக்காக பொருத்தமான திட்டங்களை மேற்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அனைவரும் மதிக்கக்கூடிய தகைமையுள்ள, நேர்மையுள்ள ஒரு தலைவன் நமக்குக் கிடைத்தும், எங்கள் சிறுமைத்தனம் அவரையும் போட்டுடைத்து விடுவதாகவே இருக்கிறது.
எடுத்தது எல்லாவற்றுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைக் குற்றம் காண்பதென்பது எந்த வகையிலும் நியாயமாகாது.வடபுலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தமிழர்களே.
யாழ்ப்பாணத்திலேயே தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் உள்ளது. தவிர வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், துறைசார் விற்பன்னர்கள் என புத்திஜீவிகள் மலிந்த மண்ணும் நம் வட மாகாணமே.
இருந்தும் ஒரு சிலரைத் தவிர, பலர் தமது பொறுப்பை உணர்ந்து கொள்வதாக இல்லை.குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எங்கள் தமிழர் தாயகத்தின் அபிவிருத்திக்கான திட்டத்தை அமைத்து அதனை செயல் நிலைப்படுத்தக் கடுமையாகப் பாடுபட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களில் சிலர் மொட்டைக் கடிதம் எழுதுவதிலும் அநாமதேய துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதிலுமே காலம் கடத்துகின்றனர்.
உலகில் உள்ள மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களில் மேற்பட்டப் படிப்புக்களை, கலாநிதிப் பட்டங்களை நிறைவு செய்தவர்கள் பலர் நம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் துயர் துடைப்பதில் இவர்கள் ஆற்றிய வகிபங்கு என்ன என்றால், மெளனமே அதற்கான விடையாகும்.
அதேவேளை செய்கின்றவர்களுக்கும் விமர்சனம், கட்சிச்சாயம். இதுவே நிலைமை என்றால், எம் இனம் எங்ஙனம் உய்ய முடியும்.
தவிர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சார்ந்த சங்கங்கள் செய்யும் கடுமையான விமர்சனங்களும் தலையீடுகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெறுமதியை அடியோடு நாசமறுத்து விட்டது என்ற உண்மையையும் இவ்விடத்தில் சொல்லித்தானாக வேண்டும்.
யாராக இருந்தாலும் அவர்கள் எல்லை தாண்டி தங்களை அதிகாரமுள்ளவர்களாக காட்டிக் கொள்வார்களாயின் அவர்களாலேயே சமூகம் பின்னடைவைச் சந்திக்கும்.இந்த நிலைமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.
கண்ணீரும் கம்பலையுமாக அலையும் எங்கள் அப்பாவித் தமிழ் மக்களின் துயர் துடைக்க வேண்டும்.இதற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்பது அவசியம். இல்லையேல் இதன் பாவபழிகள் நம்மை நிச்சயம் வருத்தும்.