தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வரும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை பிரித்தானியப் பிரதமராக்குவதற்கான வாக்குப் பலத்தை பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா அறைகூவல் விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளைய தினம் (08) நடைபெறவுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பி வரும் ஜெரமி கோர்பின் இம்முறை நடைபெறும் தேர்தலில் தொழிற்கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார்.
தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டை ஜெரமி கோர்பின் அவரது தலைமையிலான தொழிற்கட்சியின் மூத்த தலைவர்களும் எடுத்துள்ளனர்.
அத்துடன் தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தமிழின அழிப்பிற்குக் காரணமாக இருந்த இலங்கையின் முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களுக்கான செய்திக் குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, வியாழக்கிழமை நடைபெறும் தேர்தலில் தவறாது வாக்களித்து தொழிற்கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றியீட்ட வைப்பதும், அதன் மூலம் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் அமர்த்துவதும் பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் அனைவரினதும் வரலாற்றுக் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவே தமிழீழ மக்களுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை பிரித்தானியா எடுப்பதற்கு ஏதுவான அரசியல் புறச்சூழலுக்கு வழிகோலும் என்றும் சென் கந்தையா சுட்டிக் காட்டியுள்ளார்.