முல்லைத்தீவில் கடும் வரட்சியான காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக நந்திக்கடல் வட்டுவாகல் பகுதிகளில் லட்சக்கணக்கில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன.
உயிரிழந்த மீன்களை அங்கிருந்து அகற்றிய அப்பகுதி மீனவர்கள் எஞ்சியுள்ள மீன்களை வலை விரித்து இன்று பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்ககையில்..
குறித்த மீன்களின் உயிர் இழப்பிற்கு காரணம் காலநிலை மாற்றமே தவிர மீன்களுக்கு நோய் ஏற்பட்டு அவை இறக்கவில்லை என்று ஆய்வு செய்த நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வெப்பம் குறைவடைந்துள்ளது.ஆனால் இனிவரும் நாட்களில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதனால் குறிப்பிட்ட ஒருபகுதி அதாவது நந்திக்கடல்-வட்டுவாகல் பகுதியில் உயிருடன் காணப்படும் ஆயிரக்கணக்கான மீன்கள் மீண்டும் இறந்து விட வாய்ப்பு இருக்கின்றது.
அதனால் அங்குள்ள மீன்களை பிடித்து சந்தைப்படுத்தி வருகின்றோம் இன்று காலை தொடக்கம் நண்பகல் வரை சுமார் 2000 கிலோ வரையில் மீன்களை சந்தைப்படுத்தியுள்ளோம்.
மேலும் இந்த காலநிலை அனர்த்தத்தினால் சில நாட்களாக எமது தொழில் பாதிப்படைந்திருந்தது.இன்று ஓரளவு வருமானம் எமக்கு கிடைத்திருந்தாலும் இனிவரும் சில நாட்கள் நாம் தொழில் செய்ய முடியாது. ஏனெனில் இவ்வாற்றுப்பகுதியில் மீன்கள் குறைவாக காணப்படும்.
எனவே எமது வாழ்வாதாரத்தை சமநிலைப்படுத்த குறித்த ஆற்றுப் பகுதியில் உள்ள சேற்று மண்னை அகற்றி அதிகளவு மழைநீர் தேக்கி வைப்பதன் மூலம் எமது வாழ்வாதாரத்தை சமநிலைப்படுத்த முடியும்.
அதுமட்டுமல்ல உள்ளூர் மக்களின் அன்றாட உணவிற்கு மீன் கிடைக்கும்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.