அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் வத்தளை இல்லத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை அமைச்சரும், அடியாட்களும் அச்சுறுத்தி விரட்டியுள்ளனர்.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வத்தளைப் பிரதேசத்தில் கொட்டுவது குறித்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வத்தளை பிரதேசத்தில் இயங்கும் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் வத்தளை இல்லத்தில் குழுமியிருந்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த செய்தியாளர்களும் செய்தி சேகரிப்பதற்காக அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது தனியார் தொலைக்காட்சியொன்றின் செய்தியாளர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கேள்வியொன்றை முன்வைத்துள்ளார். அவரது கேள்வியில் ஆவேசம் கொண்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, கேள்வி கேட்ட செய்தியாளரை அடிக்கப் பாய்ந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் நின்றிருந்த இளைஞர்கள் சிலரும் செய்தியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். மேலும் இரண்டு செய்தியாளர்களை அமைச்சரின் வீட்டு கேட்டுக்கு வெளியே தள்ளி, மீண்டும் அமைச்சரின் வீட்டுப் பக்கம் தலைகாட்டினால் அடித்துக் கொன்று மயானத்தில் வீசிவிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
சுற்றுலாத்துறை தொடக்கம் தனக்குக் கீழ் உள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் அடாவடித்தன நிர்வாகத்தை ஊக்குவிக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்க, இதற்கு முன்னரும் பல தடவைகள் செய்தியாளர்களுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.