இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை செல்வதில்லையென அரசாங்கத்தின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின்போதே இத்தகவல் வெளிவந்தது.
இந்த அறிக்கையின்படி 2016ஆம் ஆண்டு 4,52,661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 5முதல் 17 வயதுடைய மாணவர்கள்.
அதில் 51, 249 சிறுவர்கள் ஒரு நாள் கூட பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாடசாலை செல்லாத மாணவர்கள் கிராமப் புறங்களில் வசித்து வருவதாகவும், வறுமை, நோய்கள், ஊனமுற்ற நிலை காரணமாகவே அவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லையெனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பெற்றோர்களுக்கு கல்விமீது ஆர்வம் இல்லாத காரணத்தினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், குடும்ப வறுமை காரணமாக பல சிறுவர்கள் வேலைக்குச் செல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது